தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நெருங்கும்போது, பல்வேறு கட்சிகளின் நிலைப்பாடுகள், கூட்டணி சமன்பாடுகள் மற்றும் நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. பிரதானமாக உள்ள திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளின் தற்போதைய பலம் மற்றும் பலவீனங்கள், பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளின் முடிவுகள், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் பங்கு ஆகியவற்றை வைத்து பார்க்கையில், தமிழகத்தில் மீண்டும் தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய சூழலில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவை தவிர வேறு எந்த பெரிய கட்சியும் இல்லை. இதுவே அதிமுகவின் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது. கடந்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு, அதிமுக தனது முந்தைய மெகா கூட்டணியை இழந்துள்ளது. பா.ம.க., தே.மு.தி.க., போன்ற முக்கிய கூட்டணி கட்சிகள் வெளியேறியதா? அல்லது மீண்டும் இணையுமா? என்பதை பொறுத்தே அதிமுகவின் ஒட்டுமொத்த வாக்குப்பலம் தெரிய வரும்.
பாஜகவுடனான கூட்டணி, வடமாவட்டங்களில் சில பலன்களை அளித்தாலும், சிறுபான்மையினர் வாக்குகள் மற்றும் ஒட்டுமொத்த தமிழக வாக்காளர்கள் மத்தியில் எதிர்மறையான பிம்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் அதிமுக தலைமைக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக இருந்தாலும், திமுகவின் அதிகாரபூர்வமான இந்தியா கூட்டணியின் பலத்துக்கு ஈடுகொடுக்க, புதிய மற்றும் பழைய கூட்டணி கட்சிகளை இணைப்பது அத்தியாவசியம்.
திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி (காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக) தமிழகத்தில் மிகவும் வலுவான கூட்டணி அமைப்பை கொண்டுள்ளது. இந்த சமூக அரசியல் கூட்டணி அமைப்பு, பெரும்பாலான சமூக மற்றும் சிறுபான்மையின வாக்குகளை திரட்டுவதில் அசைக்க முடியாத பலத்தை கொண்டுள்ளது.
எனினும், எந்தவொரு ஆளும் கட்சிக்கும் இயற்கையாக எழும் ஆட்சிக்கெதிரான மனநிலை தற்போது திமுக கூட்டணிக்கும் நிலவுகிறது. விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு குறித்த விமர்சனங்கள், மற்றும் சில அமைச்சர்கள் மீதான புகார்கள் போன்ற காரணங்களால், திமுக அரசின்மீது சிறிதளவு அதிருப்தி இருக்கலாம். நடிகர் விஜய்யின் புதிய கட்சியின் வருகை, இளைஞர்கள் மற்றும் நடுநிலை வாக்குகளை பிரிக்குமானால், அது திமுக கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
நடிகர் விஜய்யின் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு உண்டு என்பது வெளிப்படையாக தெரிந்தாலும், அவர் வாக்குகளை எவ்வளவு சதவீதத்திற்கு அறுவடை செய்வார் என்பது நிரூபிக்கப்படவில்லை. விஜய் தனது திரைப்படங்களின் மூலம் ஏற்படுத்தியுள்ள செல்வாக்கு காரணமாக, இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகளை அவர் நிச்சயம் கணிசமான அளவில் கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நட்சத்திர செல்வாக்கு வாக்குச்சாவடிகளில் முழுமையாக வாக்குகளாக மாறுமா, அல்லது அது சினிமா ஆதரவுடன் மட்டுமே நிற்குமா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
தமிழக அரசியலில் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை கொண்ட பா.ம.க., தே.மு.தி.க., டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். போன்றோரின் நிலைப்பாடுகள் இன்னும் தெளிவாகவில்லை. இவர்களின் முடிவுகளே தொங்கு சட்டமன்றம் உருவாகுமா என்பதை தீர்மானிக்கும்.
வடமாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமக, யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை. இவர்கள் அதிமுகவுடன் இணைந்தால், அதிமுக கூட்டணி பலமடையும். ஆனால் அதே நேரத்தில் பாமக, இரு பிரிவுகளாக பிரிந்திருப்பதும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
தேமுதிக இன்னும் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், இவர்கள் அதிமுகவுடன் இணைந்தால் அந்த கூட்டணி ஓரளவு வலுவடையும். ஆனால் தேமுதிக திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிகிறது.
டி.டி.வி. தினகரன் அணி சில தொகுதிகளில் அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் வல்லமை கொண்டது. இவர் மீண்டும் அதிமுகாவுடன் இணைந்தால் அதிமுகவுக்கு வலு சேர்க்கும். ஆனாலும் ஈபிஎஸ் அதற்கு ஒப்புக்கொள்வாரா? என்பது பெரிய கேள்வி.
ஓ.பி.எஸ். அணி மிகச்சிறிய வாக்குகளை வைத்திருந்தாலும், தென்மாவட்டங்களில் உள்ள சிலசமூக வாக்குகளை சிதறடிக்கும் காரணமாக இவர் செயல்பட வாய்ப்புள்ளது.
மேற்கூறிய அனைத்துக் காரணங்களையும், முக்கியமாக வாக்குச்சிதறல்களின் அபாயங்களையும் கருத்தில் கொண்டால், தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.
திமுக மீதான அதிருப்தி அதிகரித்து, அந்த வாக்குகள் அதிமுகவுக்கு முழுமையாக செல்லாமல், விஜய் மற்றும் பிற புதிய கட்சிகளுக்கு பிரிந்து சென்றால் முடிவு திமுகவுக்கு சாதகமாகவே இருக்கும். திமுக கூட்டணி ஒருபுறமும், அதிமுக-பாஜக கூட்டணி மற்றொருபுறமும் சண்டையிடும்போது, நடுவில் வாக்குகள் சிதறும் பட்சத்தில், எந்த கூட்டணிக்கும் 118 இடங்களை பிடிப்பதில் சிக்கல் எழலாம்.
எனினும், பிரதான திராவிட கட்சிகள் தேர்தலுக்குச் சற்று முன்பு பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. போன்ற கட்சிகளை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவந்து, வாக்குச்சிதறலை தடுக்கும் உத்திகளை நிச்சயம் கையாள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த உத்திகள் பலனளிக்கும்பட்சத்தில், தொங்கு சட்டமன்றம் என்ற நிலை தவிர்க்கப்பட்டு, ஒரு பலமான கூட்டணி ஆட்சியே அமையும் வாய்ப்பு அதிகம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
