2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணி அப்படியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை அமைக்க எதிர்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அரசியல் விமர்சனங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், புதிதாக கட்சி தொடங்கிய விஜய்யின் தமிழக வெற்றி கழகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜய்யும் திமுகவை கடுமையாக விமர்சிக்கிறார். இதனால் அதிமுக, தனது கூட்டணியில் தவெகவை சேர்த்துக் கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும், விஜய்க்கு துணை முதல்வர் பதவி உட்பட சில முக்கிய பொறுப்புகளை வழங்கவும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அதிமுக-தவெக கூட்டணி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக இணைய அதிக வாய்ப்பு உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், நாம் தமிழர் கட்சியின் சீமானும் அதிமுக கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை, திமுக எதிர்ப்பு கொள்கை கொண்ட அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பாஜகவை மட்டும் அவர் நிராகரித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே, 2026 தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இருவரும் தனித்தனியாக மெகா கூட்டணிகளை அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி தனித்து போட்டியிடும் நிலை ஏற்படக்கூடும்.