தமிழக அரசியல் களம் தற்போது ஒரு திருப்புமுனையில் உள்ளது. அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பிரதான எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளும், நடிகர் விஜய்யின் அரசியல் நகர்வுகளும் அரசியல் நோக்கர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, “தொங்கு சட்டமன்றம்” அமையுமா என்ற அச்சம் ஆளுங்கட்சியான திமுக மற்றும் எதிர்க்கட்சிகளை ஆட்டிப்படைக்கிறது.
திமுகவுக்கு சவால் விடும் பலமான எதிர்க்கட்சிக் கூட்டணி சாத்தியமா?
தமிழக அரசியலில் பிரதான கட்சிகளுக்கு எதிராக ஒரு பலமான கூட்டணி அமைவது காலத்தின் கட்டாயமாகி வருகிறது. அந்த வகையில், கடந்த காலங்களில் பிளவுபட்டு இருந்த கட்சிகள் மீண்டும் ஒன்று சேர்வது குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒன்றுபட்ட அ.தி.மு.க: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது பல்வேறு பிளவுகளுடன் காணப்பட்டாலும், தேர்தலை சந்திக்க வேண்டி வரும்போது, அனைத்து பிரிவுகளும் (ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள்) பொதுவான ஒரு தலைமையை ஏற்று, ஒன்றுபட்ட அதிமுகவாக களமிறங்கினால், அது ஒரு மாபெரும் பலமாக அமையும்.
அதிமுக-வுடன் கடந்த காலங்களில் இணைந்திருந்த பாமக, தேமுதிக, பாஜக , மற்றும் ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏசி சண்முகம் போன்றவர்களின் சில கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டால், அது ஆளுங்கட்சியான திமுக-வுக்கு மிகவும் வலுவான சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இப்படி ஒரு வலுவான கூட்டணி அமைந்தால், அது 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு கடும் நெருக்கடியைக் கொடுக்கும்.
சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் ஒருபோதும் புதியதல்ல. ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், எந்த பெரிய கூட்டணியிலும் இணையாமல், தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தால், அது தமிழக அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமையும்.
விஜய்க்கு உள்ள இளைஞர் மற்றும் நடுநிலையான ரசிகர் வாக்குகளை அவர் தனித்து ஈர்க்கும்போது, அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளின் வாக்குகளையும் பிரிக்கும். அதுமட்டுமின்றி விசிக, காங்கிரஸ், மதிமுக வாக்குகளையும் பிரிக்க வாய்ப்பு உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகள் மட்டும் தான் விஜய்க்கு வர வாய்ப்பில்லை.
இந்த வாக்கு பிரிப்பானது எந்த ஒரு கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் செய்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். இதன் விளைவாக, தமிழகத்தில் ‘தொங்கு சட்டமன்றம்’ அமையும் நிலை உருவாகும். இந்த நிலைமை ஏற்பட்டால், நிலையான ஆட்சி அமைப்பதில் பெரும் குழப்பம் உண்டாகும்.
தொங்கு சட்டமன்றம் உருவானால், தமிழக அரசியல் ஒரு மிகப்பெரிய நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும். அப்போது இரண்டு சாத்தியக்கூறுகள் உருவாகும்:
தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையை பெற, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவை நாட வேண்டிய நிலை வரும். இந்த சூழலில், விஜய்யின் கட்சி ஒரு ‘கிங் மேக்கர்’ ஆக மாறும். அவர் யாருக்கு ஆதரவு கொடுக்கிறார் என்பதை பொறுத்தே தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி அமையும். இது விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் பவரை அளிக்கும்.
ஆனால் தேர்தலுக்கு பின்னரும் விஜய் ஏதாவது ஒரு திராவிட கட்சியுடன் கூட்டணி அமைக்காவிட்டால், அரசியல் நெருக்கடி அதிகரித்து, சில மாதங்களுக்குள் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
சுருக்கமாக சொன்னால், ஒன்றுபட்ட எதிர்க்கட்சி கூட்டணி, வலுவான வாக்கு வங்கியை உருவாக்கினாலும், விஜய்யின் தனித்து போட்டியிடும் முடிவானது, அதன் வெற்றியை பாதிக்கலாம். த.வெ.க-வின் செயல்பாடு, தமிழகத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் மையப்புள்ளியாக மாறும் நிலையில், குழப்பம் நிறைந்த ஒரு தேர்தல் களம் தமிழகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
