கொடைக்கானல்: கொடைக்கானல் நகருக்குள் செல்ல வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே போக முடியும் என்கிற நிலை உள்ளது. இந்நிலையில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் நகருக்குள் செல்ல மாற்றுப்பாதை அமைக்க ஆய்வு நடந்து வருகிறது.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். சீசன் காலங்களில் பல கிமீ தூரத்திற்கு கூட அணிவகுத்து நிற்கும் அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படும்,
கொடைக்கானலை பொறுத்தவரை வாகன ஓட்டிகள் பெரியகுளம், வத்தலக்குண்டு, பழனி என 3 பாதைகள் உள்ளன. இதில் பிரதான வழி என்றால் வத்தலக்குண்டுவில் இருந்து காட்ரோடு வழியாக வரும் பாதை தான். அடுத்ததாக பழனி வழியாக கொடைக்கானல் வர முடியும் என்றாலும் பாதை சவாலானது. எ அடுத்தாக தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் கிராமம் வழியாக கொடைக்கானல் வரும் சாலை. இந்த பாதை எப்போதுமே மண் சரிவு அபாயம் உள்ள பகுதியாகும். மிகவும் அழகான இந்த பாதை, கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வது சவாலானது. செங்குத்துவாக ஏறுவது போல் இருக்கும்.
ஆனால் கொடைக்கானலுக்கு வரும் எந்த பாதையாக இருந்தாலும் பெருமாள் மலையுடன் முடிந்துவிடும். அதன்பிறகு வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே கொடைக்கானல் நகருக்குள் நுழைய முடியும் . பெருமாள் மலை முதல் வெள்ளி நீர் வீழ்ச்சி வரை சாலை மிகவும் குறுகலானது என்பதால் பெருமாள்மலையில் இருந்து கொடைக்கானல் நகர் பகுதி வரை அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். இதன் காரணமாக வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக இல்லாமல் மாற்றுப்பாதை ஒன்றை கொடைக்கானலுக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தார்கள்.
இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் கடந்த மாதம் கொடைக்கானல் பகுதிகளில் ஆய்வு நடத்தினார்கள். மேலும் மாற்றுப்பாதை அமைக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமம் முதல் கோவில்பட்டி, பேத்துப்பாறை கிராமம் வழியாக பெருமாள்மலை பகுதியில் மாற்றுப்பாதை அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என்று தனியார் நிறுவனத்தின் மூலம் ஊழியர்கள் ஆய்வு நடத்தினர்.
மேலும் வில்பட்டி, கோவில்பட்டி, டி.வி.எஸ். நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையை அளவீடும் பணிகள் நடந்தது. அந்த பகுதியில் மூன்றரை அடியாக உள்ள சாலை, 7 அடியாக அகலப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அளவீடு பணிகள் முடிந்தவுடன் சாலை அமைக்கும் பணி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.