விருதுநகர்: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேருக்கு கிடைக்க போகிறது. மேல்முறையீடு செய்தவர்கள ஜூலை 15ம் தேதி வங்கி கணக்கை செக் பண்ணுங்க.. நிச்சயம் நல்ல செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
வீட்டில் குடும்பத்திற்காக உழைக்கும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தது. இதனையடுத்து திமுக வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். அந்த வாக்குறுதியை கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ம் தேதி நிறைவேற்றினார். இந்த உரிமைத் தொகை குடும்ப தலைவிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த உரிமை தொகைக்காக மொத்தம் 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இதனிடையே மேல்முறையீட்டுக்கு பின்னர் நவம்பர் மாதம் முதல் புதிதாக 1 கோடியே 7.35 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. தற்போது 1 கோடியே 13 லட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இது தவிர மேலும் 11.85 லட்சம் மகளிர் உரிமைத் தொகைக்காக மேல் முறையீடு செய்திருந்தார்கள். இவர்களுக்கு உரிமைத் தொகை எப்போது வழங்கப்படும் என்று கேள்வி எழுந்தன. இதனையடுத்து, இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.. அதாவது, மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லடசம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களின் வங்கி கணக்கில் ஜூலை 15ம் தேதி முதல் ரூ.1000 உரிமைத் தொகை செலுத்தப்படும் என்றும் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் காரியப்பட்டியில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2வது கட்ட தொடக்க விழாவில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிமைத் தொகை ஜூலை 15 முதல் விடுவிக்கப்படும்” என்றார்.