திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில் காமாட்சியம்மன், குலப்பங்காளியம்மன் கோவில் பாபர் நாகர் சாமிக்கு படையல் வைக்கப்பட்ட வாழை இலையை தேடி திடீரன வந்த பாம்பு வந்ததால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர். நாகதேவதையே வந்ததாக நம்பிய பக்தர்கள் இதனை பார்த்து பரவசம் அடைந்தனர்.
திண்டுக்கல் அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியில் அமைந்துள்ள காமாட்சியம்மன், குலப்பங்காளியம்மன் கோவிலுக்கு தனியாக கட்டிடம் இல்லை. இங்கு பீடங்கள் வடிவிலேயே தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிப்படப்படுகிறது. இந்த கோவிலின் அருகே பழமை வாய்ந்த ஆலமரம் விஷேசமாக கருதப்படுகிறது. அங்கு பாபர் நாகர் என்றழைக்கப்படும் தெய்வத்துக்கு பீடம் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அந்த பீடத்தின் அருகில் முட்டை, பாலை வைத்து நாக தெய்வத்தை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அப்போது கோவில் பூசாரி வீட்டில் வைத்து வழிபாடு நடத்தப்படும் ‘அம்மன் பெட்டி’ மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். அதன்படி கடந்த ஜூலை 26-ந் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா ஆரம்பித்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ‘அம்மன் பெட்டி’ எடுத்து வரும் நிகழ்ச்சி கடந்த ஜூலை 3ம் தேதி காலை 7 மணிக்கு நடந்தது. பூசாரி வீட்டில் இருந்த அம்மன் பெட்டிக்கு சிறப்பு அலங்காரம், பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவிலுக்கு ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். அப்போது வானில் கருடன் வட்டமிட்டது. அதைப்பார்த்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் கருடனை வழிபட்டார்கள். பின்னர் கோவில் வளாகத்தில் பக்தர்கள் சர்க்கரை பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
பின்னர் நாகர் பீடம் அருகே வாழை இலையில் சர்க்கரை பொங்கல், எலுமிச்சை பழம், வெற்றிலை-பாக்கு, ஒரு பாதி தேங்காய் ஆகியவை படையலாக வைத்தனர். அதையடுத்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மதியம் 3.30 மணியளவில் அப்பகுதியில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் கூடி திடீரென சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பாபர் நாகர் பீடம் அருகே வைக்கப்பட்ட படையல், மழையில் நனையாமல் பாதுகாப்பதற்காக பூசாரி சென்ற போது வாழை இலை அருகே நல்லபாம்பு ஊர்ந்து வருவதை கண்டார்
படையலை ஏற்றுக்கொண்டு ஆசிர்வதிப்பதற்காக ‘பாபர் நாகரே’ நேரில் வந்திருப்பதாக நினைத்த பூசாரி பக்தி பரவசத்தில் உறைந்து நின்றார். அதற்குள் அந்த பாம்பு படையலாக வைக்கப்பட்டிருந்த சர்க்கரை பொங்கலை ஒருமுறை கொத்திவிட்டு, அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்தது. இதற்கிடையே அங்கு வந்த பக்தர்களும், பாபர் நாகரே பூஜையில் கலந்துகொண்டு ஆசிர்வாதம் கொடுத்துவிட்டார் என்று கூறி மனமுருகி வழிபட்டார்கள்
பக்தர்கள் கூட்டத்தை பார்த்தும் அந்த பாம்பு அங்கிருந்து ஊர்ந்து செல்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தது. பின்னர் பூசாரி அதற்கு தீபாராதனை காட்டி, திருநீறை போட்டு வேண்டிக்கொண்டார். அதன்பிறகு அந்த பாம்பு அங்கிருந்து ஆலமரத்தின் அருகே உள்ள புதருக்குள் சென்று மறைந்தது. இந்த சம்பவம் பாபர் நாகசாமி கோவிலுக்கு வந்த பக்தர்களை நெகிழ வைத்தது.