இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறும் உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டிக்கான மைதானங்களை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. இந்த தகவலின்படி, முல்லன்பூர், இந்தூர், திருவனந்தபுரம், கவுகாத்தி, போன்ற இடங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்ப போட்டி விசாகப்பட்டினத்திலும், இறுதி போட்டி இந்தூர் அல்லது கவுஹாத்தியில் நடைபெறும் என்றும், இந்த 5 மைதானங்களில் மட்டுமே அனைத்து போட்டிகளும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும், இலங்கையிலும் சில போட்டிகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட மைதானங்களில், 2023 ஆம் ஆண்டு ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது எந்த ஒரு போட்டியும் நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், BCCI இதுகுறித்து கூறியபோது, இந்த மைதானங்கள் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், ஐசிசி இந்த மைதானங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தவுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் வெறும் ஐந்து மைதானங்களில், அதுவும் பிரபலமில்லாத மைதானங்களில் நடத்தப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற போது, மும்பை மற்றும் கட்டாக் மைதானங்களில் தான் அனைத்து போட்டிகளும் நடத்தப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.