பெருமை எல்லாம் அவருக்கு தான்.. ஆப்கானிஸ்தானின் சாதனைக்கு காரணமா இருந்த முன்னாள் சிஎஸ்கே வீரர்..

By Ajith V

Published:

தங்களின் சர்வதேச கிரிக்கெட் பயணித்திலேயே மிக முக்கியமான ஒரு மைல்கல்லை தான் தற்போது ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி படைத்துள்ளது. எப்போதுமே கத்துக்குட்டிகள் என அறியப்பட்டு வந்த அணிகள் பின்னாளில் நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை பெரிய அணிகளுக்கு எதிராக ஏற்படுத்துவார்கள்.

அப்படி ஒரு அணியாக தற்போது உருவெடுத்துள்ள ஆப்கானிஸ்தான் அணி, விரைவில் டாப் 5 அணிகளில் ஒன்றாக மாறி விடுவார்கள் என்றே தெரிகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக சிறந்த ஆசிய அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான், டி 20 உலக கோப்பைத் தொடரில் நியூசிலாந்து உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேறி இருந்தது.

அந்த அணியில் முகமது நபி, ரஷீத் கான், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரான், குல்பதீன், நவீன் உல் ஹக், பசல் ஹக் பரூக்கி என பெரிய அணிகளுக்கு சவால் விடும் வகையில் சிறந்த அணியினை பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி சமீபத்தில் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டிருந்தது.

அந்த வகையில் முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோல்வி அடைந்திருந்தது ஆப்கானிஸ்தான் அணி. அப்படி ஒரு சூழலில் தங்களின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் சூழலும் உருவாகி இருந்தது. கடந்த ஆண்டு நடந்த ஒரு நாள் உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மிகச்சிறப்பாக பந்த வீசியிருந்த ஆப்கானிஸ்தான், மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த தவறியதால் தோல்வியை தழுவியது.

ஆனால் இந்த முறை அப்படி எந்த தவறும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்த ஆப்கானிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவுக்கு 149 ரன்களை இலக்காக நிர்ணயித்திருந்தது. ஆனால் இதனை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியாவில் மேக்ஸ்வெல்லை தவிர எந்த வீரர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

குல்பதீன், நவீன் உல் ஹக், ரஷீத் கான் என அனைவருமே சிறப்பாக பந்து வீச ஆஸ்திரேலியா அணியால் இலக்கை நெருங்க முடியாமலே போய்விட்டது. இதனால் அவர்களை 127 ரன்களில் ஆல் அவுட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் ஐசிசி வெற்றியையும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் கடந்த ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் தோல்வியடைந்ததற்கு பழிக்கு பழியும் தீர்த்துக் கொண்ட ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு தான் மிக அற்புதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரான பிராவோ, சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக ஐபிஎல் தொடரில் ஆடி உள்ளார்.
bravo afghanistan

இவர் சென்னை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்து வந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு ஆலோசராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது ஆலோசனைகள் ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக இருந்து வரும் நிலையில், வரும் போட்டியில் வங்காளதேச அணியை வீழ்த்தினால் அவர்களுக்கு முதல் ஐசிசி தொடரின் அரையிறுதிக்கும் முன்னேறும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.