ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. இனி எந்த கேப்டனும் நெருங்க முடியாத உயரத்தை தொட்ட ரோஹித் ஷர்மா..

By Ajith V

Published:

இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த போட்டி டையில் முடிந்திருந்தது ரசிகர் மத்தியில் மிகப்பெரிய ஒரு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது. ஒரு கட்டத்தில் இந்திய அணி தோல்வியடையும் என்ற நிலையில் இருந்த போது கே எல் ராகுல் மற்றும் அக்சர் படேல் இணைந்து சிறப்பாக ஆடி போட்டியை இந்தியாவின் பக்கம் திருப்பி இருந்தனர்.

அவர்கள் அவுட்டான பின்னர், கடைசி கட்டத்தில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாத போது பந்து வீச்சாளர்களுடன் சேர்ந்து சிறப்பாக ஆடி ரன் சேர்த்த ஷிவம் துபே, இந்திய அணியை வெற்றிக்கு அருகிலேயே கொண்டு வந்து விட்டார். அப்படி இருந்த போதிலும் கடைசி கட்டத்தில் 48 வது ஓவரில் நடந்த சில தவறுகள் இலங்கை அணிக்கு சாதகமாகவும் மாறிவிட்டது.

கடைசி 16 பந்துகளில் கைவசம் இரண்டு விக்கெட் இருக்க இந்திய அணியின் வெற்றிக்கு ஐந்து ரன்கள் தேவைப்பட்டது. அந்த சமயத்தில் பவுண்டரி ஒன்றை அடித்த ஷிவம் துபே, ஸ்கோரை டிரா செய்திருந்தார். இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்று விடும் என அனைவரும் எதிர்பார்த்ததுடன் கம்பீர், ரோஹித் ஷர்மா என பெவிலியனில் இருந்த அனைவருமே சிரிக்க தொடங்கி விட்டனர்.

ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்காமல் போக அடுத்த பந்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இலக்கை சமன் செய்த ஷிவம் துபே, அடுத்த பந்திலயே எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக பின்னர் வந்த அர்ஷ்தீப் சிங் அவசரப்பட்டு அடிக்க பார்த்து முதல் பந்தியிலேயே அவுட்டாகி இருந்தார்.

இதனால் கடைசி ஒரு ரன்னை கொடுக்காமல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்த இலங்கை அணி, போட்டி டையில் முடியவும் வழி வகுத்திருந்தனர். இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய வீரர்களும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் அதே வேளையில் இந்த போட்டியில் தொடக்க வீரராக இறங்கி டி20 போட்டிகளை போல அதிரடி காட்டிய ரோஹித் ஷர்மா, தற்போது மிக முக்கியமான சாதனை ஒரு கேப்டனாக படைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கி 47 பந்துகளில் 58 ரன்கள் எடுத்த ரோஹித் ஷர்மா, மூன்று சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன் என்ற பெருமையையும் தற்போது பெற்றுள்ளார். இவர் இதுவரை 234 சிக்ஸர்கள் அடித்துள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் இயான் மோர்கன் 233 சிக்ஸர்களும், மூன்றாவது இடத்தில் தோனி 211 சிக்ஸர்களையும் கேப்டனாக அடித்துள்ளனர்.

ரோஹித்தின் கீழ் இந்த பட்டியலில் இருக்கும் பலரும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ள நிலையில் இன்னும் சிலர் கேப்டன் பதவியை துறந்துள்ளனர். இதனால் ரோஹித்தின் இந்த இடத்தை ஒரு கேப்டனாக எட்டிப் பிடிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.