இந்தியா மற்றும் இலங்கை அணிகள் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டி மிகப்பெரிய ஒரு அதிருப்தியை தான் இந்திய ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருந்தது. மெல்ல மெல்ல ரசிகர்கள் இரண்டாவது போட்டிக்கு தயாராகி வரும் நிலையில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பலரும் ஒருவிதமாக பாராட்டி வருகின்றனர்.
பந்து வீச்சாளர் அல்லது பேட்ஸ்மேனாக ஒரு வீரர் இருக்கும் போது அவர் கேப்டன் என்ற பொறுப்பை கூடுதலாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவரது ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் நெருக்கடி உருவாகும். இது இந்திய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளில் உள்ள கேப்டன்களுக்கு நடந்துள்ள சூழலில், ரோஹித் ஷர்மாவும் கேப்டனான போதும் பேட்டிங் திறனை இழப்பார் என்று கருதப்பட்டது.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி கேப்டனாகவும் அதே வேளையில் ஒரு பேட்ஸ்மேனாகவும் அசத்தி வரும் ரோஹித் ஷர்மா, சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இரண்டிலும் தன்னை நிரூபித்து கோப்பையைக் கைப்பற்ற காரணமாக அமைந்திருந்தார்.
முன்பெல்லாம் ஆரம்பத்தில் பொறுமையாக ஆடி ரன் சேர்த்து விட்டு பின்னர் அதிரடி காட்டுவதை ரோஹித் ஷர்மா வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் சமீப காலமாக ஆரம்ப பவர்பிளே ஓவர்களிலேயே நிறைய ரன்கள் சேர்த்து அவுட்டாவதை வழக்கமாக வைத்துள்ளார் ரோஹித் ஷர்மா. இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் 231 ரன்கள் இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே சிக்சர் அடித்து பட்டையை கிளப்பி இருந்தார்.
ரோஹித் ஷர்மா பவர் பிளே முடிவதற்குள்ளே அரைச்சதம் அடித்ததுடன் டி20 போட்டிகளில் இருந்து தான் ஓய்வினை அறிவித்தாலும் அதை ஒரு நாள் போட்டியில் கடைபிடிப்பதாக ஜாலியாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அதே வேளையில் மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடினால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அப்படி ஒரு சூழலில், ஒரு நாள் போட்டியின் பவர் பிளே ஓவர்களில் கேப்டனான பின்னர் ரோஹித் ஷர்மா தொட்ட உயரம் பற்றி தற்போது பார்க்கலாம். கேப்டனாக இல்லாத போது ஒரு நாள் போட்டியின் பவர் பிளே ஓவர்களில் 70.3 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிக் கொண்டிருந்தார். ஆனால், ரோஹித் கேப்டனான பின்னர் 115.6 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி வருகிறார்.
அதே போல சராசரியும் 38.9 ஆக இருந்த நிலையில், கேப்டனாக மாறியதன் பின்னர் 67.4 என்ற சராசரியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது தவிர ஒரு பவுண்டரி அடிக்கும் பந்துகளுக்கான இடைவெளியும் கேப்டனான பின்னர் குறைந்துள்ள நிலையில் முன்பு 9.8 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி எடுத்தவராக இருந்தவர் தற்போது ஐந்து பந்துகளுக்கு ஒரு பவுண்டரி அடித்து பட்டையை கிளப்பி வருகிறார்.