அஸ்வின் டெஸ்டில் சதமடிச்ச போட்டியில் எல்லாம்… இந்திய அணிக்கு கிடைத்த பெருமை… அப்போ வங்கதேசம் கதை முடிஞ்சுதோ..

Published:

பாகிஸ்தான் அணியை இரண்டு டெஸ்டிலும் வீழ்த்தி சரித்திரம் படைத்து விட்டு தற்போது இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள வங்கதேச அணி, அவர்களுக்கு எதிராக அப்படி ஒரு அதிர்ச்சியை கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால் அதே வேளையில் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் வங்கதேச அணி கொடுத்த தொடக்கம் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக தான் அமைந்திருந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. ஆனால் கடைசியில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இணைந்து இந்திய அணியை கரை சேர்த்திருந்ததும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாமல் இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் தொடர்களில் தவறாமல் இடம்பிடித்து விடுவார். அதிலும் இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் என வந்து விட்டால் அஸ்வினை கட்டுப்படுத்துவது மிக கடினமாக அமைந்து விடும்.

சுழற்பந்து வீச்சில் நிறைய புதுமையான முயற்சிகளை ஒவ்வொரு தொடரின் போதும் கற்று அதனை பயன்படுத்தி வரும் அஸ்வின், எதிரணி பேட்ஸ்மேன்களை ரன் சேர்க்கவே விடுவது கிடையாது. பவுலராக சர்வதேச அரங்கில் முக்கியமான வீரராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு ஆல் ரவுண்டர் வீரர் என்பதையும் பலமுறை நிரூபித்து வருகிறார்.

அப்படித்தான் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டிலும் சதமடித்து தான் சிறந்த லெஜெண்ட் என்பதையும் நிரூபித்துள்ளார். 144 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய சமயத்தில் கைகோர்த்த அஸ்வின் மற்றும் ஜடேஜா 195 ரன்களை முதல் நாள் முடிவில் பார்ட்னர்ஷிப்பாக அமைத்துள்ளனர்.

தற்போது 339 ரன்களை சேர்த்துள்ள இந்திய அணி இரண்டாவது நாளில் இன்னும் அதிக ரன் சேர்த்து வலுவாக விளங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் 102 ரன்கள் எடுத்துள்ள சூழலில் அவரது ஆறாவது டெஸ்ட் சதமாகவும் இது அமைந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நான்கு முறை டெஸ்ட் போட்டியில் சதமடித்துள்ள அஸ்வின், இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிக்கு எதிராக தலா ஒரு முறை சதமடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்திய அணி ஆட்டத்தை பார்க்கும் போது இந்த டெஸ்டில் பாகிஸ்தான் போல தோற்றுவிடும் என்று தான் அனைவரும் கருதினர். ஆனால் தற்போது அதே பலமுடன் இருக்கும் அதே வேளையில் அஸ்வின் சதமடித்துள்ளதும் ஒரு சாதகமான விஷயமாக அமைந்துள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

இதற்கு முன்பாக அஸ்வின் சதமடித்துள்ள ஐந்து முறையும் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது கிடையாது. வங்கதேச அணிக்கு எதிராக அஸ்வின் சதமடித்துள்ள நிலையில் அவரது அதே பெருமை இந்த போட்டியிலும் தொடரும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...