இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 வது டெஸ்டில் சவாலான பேட்டிங்கை தொடங்கி இருந்தாலும் கடைசி கட்டத்தில் அவர்கள் கண்ட சரிவு பின்னடைவாகவும் மாறிப் போயுள்ளது. சொந்த மண்ணில் கடந்த இரண்டு முறையும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்திருந்தது ஆஸ்திரேலிய அணி.
அதற்கு இந்த முறை நிச்சயம் பழி வாங்கியே தீருவோம் என்ற நோக்கிலும் ஆஸ்திரேலிய அணி களமிறங்கி இருந்தது. தொடரும் தற்போது 1 – 1 என்ற கணக்கில் சமனாக இருக்க, இதனை இரு அணிகளில் தக்க வைத்துக் கொள்ளப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் முக்கிய போட்டியான 4 வது டெஸ்டின் இரண்டு நாட்கள் முடிவடைந்து விட்டது.
இதன் முதல் இன்னிங்சில் டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 474 ரன்கள் சேர்த்திருந்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் எடுக்க, முதல் 3 வீரர்களான சாம் கொன்ஸ்டாஸ், கவாஜா மற்றும் மார்னஸ் ஆகிய மூவருமே அரைசதம் கடந்திருந்தனர்.
மீண்டும் ஏமாற்றிய ரோஹித்
இதனால், அவர்களது பேட்டிங் வலுவாக அமைந்ததுடன் நல்ல ஸ்கோரையும் சேர்த்திருந்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, மீண்டும் ஒருமுறை மோசமாக ஆடி வெறும் 3 ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார். இதனைத் தொடர்ந்து ராகுலும் 24 ரன்களில் அவுட்டாக, கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் இணைந்து 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
அணியின் ஸ்கோர் 153 ஆக உயர்ந்த போது, இளம் வீரர் ஜெய்ஸ்வால் 82 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி இருந்தார். அடுத்த ஓவரிலேயே 36 ரன்கள் சேர்த்த கோலி அவுட்டாக, இந்திய அணி சற்று தடுமாற்றம் கண்டது. 2 விக்கெட்டிற்கு 152 ரன்கள் என வலுவாக இருந்த இந்திய அணி, 159 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
தோனிக்கு நடந்ததே தான்..
2 வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்துள்ள இந்திய அணி, இன்னும் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதனிடையே, 82 ரன்களில் ஜெய்ஸ்வால் ரன் அவுட்டானதால் தோனிக்கு நடந்ததை போலவே ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சேனா (சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா) நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டியி்ல் இந்திய வீரர்களான தோனி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தான் 80 அல்லது 90 களில் இருந்த போது ரன் அவுட்டாகி உள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு, நாட்டிங்காமில் தோனி 82 ரன்களில் ரன் அவுட்டாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து அதே ரன்னில் ஆடிக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், தற்போது மெல்போர்ன் மைதானத்தில் ரன் அவுட்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.