கடந்த இரண்டு முறையும் ஆஸ்திரேலிய அணியை அவர்களது மண்ணிலேயே அசால்டாக டீல் செய்திருந்த இந்திய அணி, இந்த முறை நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் அவர்களை எதிர்கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டு வருவதாகவே தெரிகிறது. முன்பு போல இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வலுவிழந்து காணப்படுவது முதல் 3 டெஸ்ட் போட்டிகளில் அப்பட்டமாகவே தெரிந்திருந்தது.
இந்த தொடரின் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தாலும் 2 வது டெஸ்டில் அபார வெற்றி பெற்றிருந்தனர். தொடர்ந்து 3 வது டெஸ்டிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருக்க, மழை காரணமாக போட்டி டிராவில் முடிவடைந்திருந்தது. இதனிடையே, தற்போது ஆரம்பமாகி நடந்து வரும் 4 வது டெஸ்ட், வரும் நாட்களில் விறுவிறுப்பை எகிற வைக்கும் என்றே தெரிகிறது.
முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி, 474 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் சேர்த்திருந்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணி, 164 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருக்கும் இந்திய அணி, 2 வது நாளின் கடைசி கட்ட ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்திருந்தது.
இதனால், 3 வது நாளில் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்த ஆஸ்திரேலிய அணி ஒரு பக்கம் துரிதம் காட்டும். இன்னொரு புறம், இந்திய அணியும் பாலோ ஆனை தவிர்த்து நல்ல ஸ்கோரை எட்ட முயற்சி செய்யும் என தெரிகிறது.
மோசமான ஃபார்மில் ரோஹித்
இன்னும் 3 நாட்கள் இருப்பதால் ஒரு அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள நிலையில், இந்திய அணிக்கு நெருக்கடி அதிகம் இருப்பதாக தெரிகிறது. இதனிடையே, முதல் டெஸ்டில் கலந்து கொள்ளாமல் 2 வது டெஸ்ட் முதல் ஆடிவரும் ரோஹித் ஷர்மாவை பலரும் விமர்சித்து தான் வருகின்றனர். அவர் இல்லாத போது கூட இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அவரது வருகைக்கு பின்னர் இந்தியா தோல்வி கண்டதுடன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாவதை வழக்கமாகவும் வைத்துள்ளார் ரோஹித்.
75 வருடத்தில்..
அந்த வகையில், அதிக ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய 4 வது டெஸ்டிலும் தொடக்க வீரராக வந்து வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். மேலும் கடந்த பல டெஸ்ட் இன்னிங்ஸ்களில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் தான் ரோஹித் அவுட்டாகி வருகிறார். இதனால் அவர் ஓய்வு பெற வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில் SENA டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக 10 இன்னிங்ஸ்களில் 15.55 சராசரியை தான் ரோஹித் வைத்துள்ளார். இதன் மூலம், கடந்த 75 ஆண்டுகளில் SENA நாடுகளில் குறைந்த சராசரியை வைத்த இந்திய கேப்டன் என்ற பரிதாப பெயரும் ரோஹித்திற்கு கிடைத்துள்ளது.