உள்ளே, வெளியே.. ராகுல், பந்த் விஷயத்தில்.. ஏலத்தின் போது நடந்த சுவாரஸ்ய சம்பவம்..

By Ajith V

Published:

KL Rahul and Rishabh Pant : ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல் நாள் மிகச் சிறப்பாக நடந்து முடிந்த நிலையில் இது தொடர்பாக நிறைய சுவாரஸ்யமான சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ரிஷப் பந்த் மெகா ஏலத்துக்கு முன்பாகவே இந்த முறை அதிக தொகைக்கு போவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. அது அப்படியே நடந்துள்ள நிலையில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி அவரை 27 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து சாதனை புரிந்துள்ளது.

அதே போல ஷ்ரேயஸ் ஐயரும் பஞ்சாப் கிங்ஸ் அணி மூலம் 26.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயரை கொல்கத்தா அணி 23.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்க அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் தலா 18 கோடிகளில் பஞ்சாப் அணி எடுத்திருந்தது. இதே போல நிறைய வீரர்கள் 10 கோடி ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு அணிகளாலும் எடுக்கப்பட முதல் நாளில் மட்டும் 72 வீரர்கள் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ள நிலையில் இதற்காக 467.95 கோடி ரூபாயை அனைத்து அணிகளும் சேர்த்து செலவாக்கியுள்ளது.

டெல்லி அணியில் கே எல் ராகுல்

ஒரே நாளில் இது மிகப்பெரிய தொகையாக பார்க்கப்பட்டு வரும் நிலையில் அதிக தொகை கிடைத்த வீரர்கள் நிச்சயம் சிறப்பாக ஆட வேண்டும் என்று நெருக்கடியை உருவாக்கலாம். அந்த வகையில் டெல்லி அணியின் கேப்டனாக இருந்து பேட்டிங்கில் கலக்கினாலும் தனது அணியை அடுத்தடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல முடியாமல் திணறி இருந்த ரிஷப் பந்த் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

இன்னொரு பக்கம் ரிஷப் பந்த்தை போல அதிக தொகைக்கு போவார் என எதிர்பார்க்கப்பட்ட ராகுலை 14 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஏலத்தில் எடுத்திருந்தது. அவரும் 20 கோடி ரூபாயை கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான் 14 கோடிக்கு டெல்லி அணி எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்ள.. வெளிய

இவர் லக்னோ அணியில் இடம்பிடித்திருந்த நிலையில் கேப்டனாக இருந்த போதிலும் சில செயல்பாடுகள் காரணமாக அவருக்கும் அணி நிர்வாகத்தினருக்கும் இடையே அதிருப்தி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ராகுலே தானாக முன்வந்து லக்னோ அணியில் இருந்து விலகியதாக தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் தற்போது டெல்லி அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் அந்த அணியின் புதிய கேப்டனாகவும் ராகுல் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் தான் டெல்லியின் கேப்டனாக இருந்த பந்த், தற்போது லக்னோ அணியிலும், லக்னோவின் கேப்டனாக இருந்த ராகுல் டெல்லியில் இணைந்துள்ளது தொடர்பான கனெக்சனை ரசிகர்கள் வியப்பாக குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர். அந்த இரண்டு பேரும் தாங்கள் தற்போது இடம்பெற்றுள்ள அணிகளின் கேப்டனாகவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.