ஐபிஎல் தொடரில் 5 வருஷம் கழித்து நடந்த ரேரான சம்பவம்.. காரணமே ராஜஸ்தான் ராயல்ஸ் தான்..

Published:

17வது ஐபிஎல் சீசன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நடந்து வரும் 10 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதற்கு முன்பு நடந்த 9 போட்டிகளும் விறுவிறுப்பாகவே சென்றதுடன் அனைத்து அணிகளுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி இருந்தது. ஆர்சிபி அணியை இதில் வீழ்த்தி இருந்த சிஎஸ்கே, இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் ஒரு கை பார்த்து வெற்றி கண்டதுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலும் உள்ளது. தோனியும் கேப்டன் பதவியில் இருந்து மாறியதுடன் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வினை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அந்த அணி ஐபிஎல் கோப்பையை வென்று தோனிக்கு சிறந்த பிரியாவிடை கொடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். இதே போல, பலம் வாய்ந்த அணியாக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா தலைமையில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இதுவும் மும்பை ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை சந்தித்து வரும் நிலையில், சஞ்சு சாம்சன் தலைமயிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளது. லீக் சுற்று முடியும் வரை எந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதை அறிந்து கொள்ள முடியும் என்ற அளவுக்கு தான் ஒவ்வொரு போட்டிகளும் நடந்து வருகிறது.

அப்படி ஒரு சூழலில் தான், ஐபிஎல் வரலாற்றில் அரிதான நிகழ்வு ஒன்று இந்த சீசனில் அரங்கேறி உள்ளது. அதாவது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வரும் போட்டிக்கு முன்பாக மொத்தம் 9 ஐபிஎல் போட்டிகள் இந்த சீசனில் நடந்துள்ளது.

அப்படி இந்த 9 போட்டியிலும் சொந்த மைதானத்தில் ஆடிய அணிகள் தான் வெற்றி கண்டுள்ளது. இதற்கு முன்பாக கடந்த 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 8 போட்டியில் சொந்த மைதானத்தில் ஆடிய அணிகள் வெற்றி கண்டுள்ளது. அதனை தற்போது முறியடித்து 9 அணிகள் தொடர்ச்சியாக அவர்கள் மைதானத்தில் வெற்றி கண்டு சாதனையை முறியடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...