இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான கேப்டன்களில் ஒருவராக இருந்தவர் தான் மகேந்திர சிங் தோனி. 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்து சச்சினுக்கு மிகச் சிறந்த ஃபேர்வெல் ஒன்றையும் கொடுத்திருந்தார் தோனி. இதனைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக 2013ல் வென்று கொடுத்த தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து ஆடி வருகிறார்.
இந்திய அணி பல கேப்டன்களை கண்டிருந்தாலும் அவர்கள் யாருக்கும் இல்லாத பல புதுமையான விஷயங்கள் தோனியிடம் இருந்தது. சில வீரர்கள் தொடர்ந்து சொதப்பினாலும் அவர்களுக்கான வாய்ப்பை அணியில் கொடுத்து வருவதுடன் முன்னணி வீரர்களாக மாறுவதற்கு என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் பல விமர்சனங்களை தாண்டி செய்தவர்தான் தோனி.
ஒரு சமயத்தில் ரோஹித், கோலி உள்ளிட்ட பல வீரர்களின் ஆட்டம் சொதப்பிக் கொண்டே இருக்க, கடும் விமர்சனம் உருவாகி இருந்தது. ஆனால் அவர்களை எந்த போட்டியிலும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்ததுடன் மட்டுமில்லாமல் இன்று அவர்களை போல பலரும் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெயரை எடுப்பதற்கு தோனியின் பங்கும் மிகப் பெரியது.
அதேபோல குல்தீப் யாதவ், சாஹல் உள்ளிட்டோரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இந்திய அணியில் விளங்க தோனியின் கேப்டன்சி முக்கிய காரணமாக இருந்தது. கீப்பிங் நிற்கும்போது அவர்கள் இருவருக்கும் சரியான அறிவுறுத்தலை கொடுத்து அதற்கேற்ப பந்து வீச வைத்து ஸ்மார்ட்டாக விக்கெட்டுகளையும் தூங்குவார்.
இன்று இந்திய அணியில் முன்னணி வீரர்களாக இருக்கும் பலரும் தோனியின் தலைமையில் உருவாகி வளர்ந்தவர்கள் தான். இப்படி இந்திய கிரிக்கெட்டின் தற்போதைய நிலைக்கு தோனியின் கேப்டன்சி ஒரு காரணமாக இருக்க, அவர் எடுத்த சில முடிவுகளுக்கும் தற்போது நடந்து வரும் விஷயங்களுக்கும் உள்ள ஒற்றுமையை பார்க்கலாம்.
மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக மாற்றி இருந்தது கேப்டன் தோனி தான். அதன் பின்னர் இன்று வரையிலும் தொடக்க வீரராகவே களமிறங்கி வரும் ரோஹித் ஷர்மா பலருக்கும் பிடித்தமான தொடக்க வீரராக இருந்து வருகிறார்.
ஆனால் அதே வேளையில் கோலியை ஒரு முறை கூட தொடக்க வீரராக எந்த போட்டியிலும் களமிறக்காமல் இருந்து வந்தார் தோனி. தொடர்ந்து விராட் கோலி மூன்றாவது அல்லது நான்காவது வீரராக தோனியின் தலைமையில் களமிறங்கி வந்த நிலையில் தற்போது டி20 உலக கோப்பை தொடர் முழுக்க ரோஹித் தலைமையில் அவர் தொடக்க வீரராக ஆடி வருகிறார்.
அது எந்த போட்டியிலும் கை கொடுக்காமல் போன நிலையில் இறுதி போட்டியிலாவது ஏதேனும் மாற்றத்தை உருவாக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு வீரனின் ஆட்டத்தை சரியாக கணித்து புரிந்து கொள்ளும் தோனி, கோலியை எந்த போட்டியிலும் தொடக்க வீரராக களமிறக்காமல் வைத்ததற்கான காரணம் தற்போது பல கிரிக்கெட் ரசிகர்களுக்கும் விளங்கியுள்ளது.