ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சீரான ஆட்டத்திற்கு பிறகு திடீரென விக்கெட்டுகளை இழந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பர்ஹான் மற்றும் ஃபாக்கர் ஆகியோர் அபாரமாக விளையாடி, முறையே 57 மற்றும் 46 ரன்கள் எடுத்தனர். இந்த இருவரின் விக்கெட்டுக்களை வருண் சக்கரவர்த்தி வீழ்த்திய பின்னர் பாகிஸ்தான் பேட்டிங்கில் பின்னடைவு ஏற்பட்டது.
தொடக்க ஆட்டக்காரர்களை தவிர, மற்ற பேட்ஸ்மேன்களில் சைம் அயூப் மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் எடுத்தார். எஞ்சிய 8 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதில் மூன்று வீரர்கள் டக் அவுட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
15 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்த பாகிஸ்தான் அணி, அதன் பிறகு இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் நிலை குலைந்தது. அடுத்த நான்கு ஓவர்களில் மேலும் 5 விக்கெட்டுகளை மளமளவென இழந்தது.
இந்திய பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மிக அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில், ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தானுக்குப் பெரும் நெருக்கடியை கொடுத்தார். இவருக்கு உறுதுணையாக, பும்ரா, வருண் சக்கரவர்த்தி, மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 147 ரன்கள் என்ற இலக்கை நோக்கி, இந்திய அணி இன்னும் சில நிமிடங்களில் களமிறங்க உள்ளது. வர்ணனையாளர்களின் கருத்துப்படி, இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
