அடேங்கப்பா.. டி 20 வேர்ல்டு கப்ல இப்படி ஒரு ரெக்கார்டா.. எந்த அணியாலும் நோர்ஜேவுக்கு எதிரா முடியாத விஷயம்…

By Ajith V

Published:

டி 20 போட்டிகள் என வந்து விட்டால் எப்போதுமே பேட்ஸ்மேன்கள் தான் அதிக பலத்துடன் விளங்குவார்கள். ஆனால், அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் வைத்து தற்போது நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பைத் தொடரில் பெரும்பாலான லீக் போட்டிகள் முழுக்க முழுக்க பந்து வீச்சாளர்களுக்கு மட்டும் தான் சாதகமாக அமைந்திருந்தது.

அமெரிக்காவின் நியூயார்க் உள்ளிட்ட பல பிட்ச்கள் மற்றும் மைதானங்கள் அனைத்து அணிகளுக்கும் புதிதாக இருக்க அவை பேட்டிங்கிற்கு கொஞ்சம் கூட சாதகமாக அமையவில்லை. இதனால், அனைத்து போட்டிகளும் பந்து வீச்சாளர்கள் கட்டுப்பாட்டில் அதிகமாக இருந்து வந்தது. இதனிடையே, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்க்கா என மொத்தம் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றிற்கு முன்னேற்றம் கண்டிருந்தது.

இதில் க்ரூப் 2 வில் வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றிருந்தது. பல கட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூப்பர் 8 சுற்று ஆரம்பமாக, முதல் போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் மோதி இருந்தது. ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தினால் தான் அமெரிக்கா முன்னேறியது என எதிர்பார்த்தால் அவர்கள் ஆடிய ஆட்டம், அடுத்த சில ஆண்டுகளில் சர்வதேச அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கப் போகிறார்கள் என்பதை உணர்த்தி இருந்தது.

195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியிருந்த அமெரிக்க அணியில் தொடக்க வீரர் ஆண்ட்ரியஸ் கோயஸ், 80 ரன்கள் எடுக்க அவருடன் இணைந்து அதிரடி பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி இருந்த ஹர்மீத் சிங்கும் சிறப்பாக ஆட, தென்னாபிரிக்க அணியை எளிதாக வீழ்த்தி விடுவார்கள் என்று தான் அனைவருமே கருதினர்.

ஆனால் கடைசி இரண்டு ஓவர்களில் ரபாடா மற்றும் நோர்ஜே ஆகிய இரண்டு பேரும் சிறப்பாக பந்து வீச, கையில் இருந்த போட்டியை இழந்து உடைந்து போயினர் அமெரிக்க வீரர்கள். இருந்தாலும், தென்னாபிரிக்க அணிக்கு பயத்தை காட்டிய அமெரிக்க அணி, நிச்சயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று தான் தெரிகிறது.

இதனிடையே, தென்னாபிரிக்க வீரரான ஆன்ரிச் நோர்ஜே டி 20 உலக கோப்பையில் இதுவரை படைத்து வரும் முக்கியமான சாதனை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம். இதுவரை 15 டி 20 உலக கோப்பை போட்டிகளில் ஆடியுள்ள நோர்ஜே, 30 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அது மட்டுமில்லாமல், டி 20 உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த தென்னாப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் வரிசையில் 30 விக்கெட்டுகளை எடுத்து டேல் ஸ்டெய்னுடன் முதலிடத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது போக, இதுவரை ஆடிய 15 டி 20 உலக கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட விக்கெட் எடுக்காமல் நோர்ஜே இருந்ததில்லை. அமெரிக்காவுக்கு எதிராக கூட கடைசி ஓவர் வரை விக்கெட் எடுக்காமல் இருந்த நோர்ஜே, 20 வது ஓவரில் விக்கெட்டை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் இந்த முறை 2 வது இடத்திலும் அவர் இருந்து வருகிறார்.