இன்று (30.3.2025) யுகாதி எனப்படும் தெலுங்கு வருட பிறப்பு திருநாள். ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, கோவா போன்ற மாநிலங்களில் யுகாதி திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகையில் என்ன விசேஷம் என்பது பற்றி பார்க்கலாமா…
யுகாதி என்றால் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம். யுகம் என்றால் காலம். ஆதி என்றால் தொடக்கம். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இன்று தான் அந்த இனிய திருநாள். இந்த நாளில் பிரம்மாவை விநாயகர், லட்சுமி, பார்வதி, விஷ்ணு, ராமர் போன்ற கடவுள்களுடன் சேர்த்து வழிபடுகிறார்கள்.
இந்தப் பண்டிகை ஒரு வாரத்திற்கு முன்பே தொடங்கி விடுகிறது. வீடுகளை சுத்தம் செய்து அலங்கரிக்கத் தொடங்கி விடுவர். வீட்டின் வாசலில் பெண்கள் கண்கவரும் ரங்கோலி கோலங்கள் போடுவர். நமக்கு தீபாவளி மாதிரி அவர்களுக்கு யுகாதி. சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து எண்ணை தேய்த்துக் குளித்து விடுவர். கோவில்கள், வீடுகளில் மாவிலைத் தோரணங்கள் கட்டப்படும்.
புதிய தொழில்கள் தொடங்குவர். கடை திறப்பு விழாக்கள் நடக்கும். வீட்டில் இனிய சுவையான பலகாரங்களும், உணவுகளும் செய்து மகிழ்வர். இன்றைய ஸ்பெஷல் என்னன்னா பல்சுவை கொண்ட பச்சடி. வேப்பம்பூ, மிளகாய்த் தூள், புளி, மாம்பழம், வெல்லம், உப்பு ஆகியவற்றைக் கலந்து இந்த பச்சடி தயாரிக்கப்படும்.
நம் வாழ்க்கையிலும் இதுபோன்ற எல்லா சுவைகளும் வரும். அதை நாம் கடந்து அனுபவித்து ரசித்து செல்ல வேண்டும் என்பதை உணர்த்தவே இந்த பச்சடியை செய்கிறார்கள். அதுதவிர ஹோலிகே, புலியோகுரே போன்ற உணவுகளும் இங்கு ஸ்பெஷலாம். புதிய வீடு கட்டவும், சொத்து வாங்கவும் இது சிறந்த நாள் என்கிறார்கள்.