சைவ சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவில். இக்கோவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது. மலை மேல் உள்ள இக்கோவில் 545 படிக்கட்டுகளுடன் மலையில் இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது. ஸ்வாமி பெயர் வேதகிரீஸ்வரர், அம்பாள் பெயர் சொக்கநாயகி ஆவார்.
இத்தலத்தின் சிறப்பு என்னவென்றால் மலையாய் இருத்தலின் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது; வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள் ஆகும்.
புராணங்களின் படி, தேவர்களின் தலைவனான இந்திரன் இடி மின்னல் வடிவில் வந்து இங்குள்ள இறைவனை வழிபாடு செய்வதாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, 1930ம் ஆண்டு நவம்பர் 10ம் நாள் மிகப்பெரிய இடி ஒன்று திருமலைக் கோயில் கலசத்தை தாக்கி அந்த துளை வழியாக கருவறையில் நுழைந்து சிவனை அடைந்ததாகவும், அதனால் உருவான தாங்கமுடியாத வெப்பம் மற்றும் அதிர்வுகளை மறுநாள் கோயில் கதவை திறந்ததும் உணர்ந்ததாகவும் கூறுகின்றனர். இப்பொழுதும் இந்த வழிபாடு நடைபெற்றுக்கொண்டு இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
இங்கு மதியம் வரும் கழுகுகள் தினமும் வந்திருந்து ஸ்வாமிக்கு படைக்கும் பிரசாதத்தை எடுத்து செல்வதாக ஐதீகம். இந்த நிகழ்வை பார்ப்பதற்காகவே அதிகமான கூட்டம் இங்கு வருகிறது.
இங்குள்ள சங்கு தீர்த்தத்தில் நாட்கள் நீராடி விடியற்காலையில் நீராடி இந்த மலையை கிரிவலம் வருவோருக்கு மனநோய்கள் அனைத்தும் விலகி அமைதி பிறக்கும் என்பது நம்பிக்கை.