ஆடி 18ஐ ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன்? ஆடிப்பட்டம் தேடி விதைன்னு சொன்னது எதற்காக?

By Sankar Velu

Published:

ஆடி மாதத்தில் மிகவும் விசேஷமான நாள் ஆடிப்பெருக்கு. இதை ஆடி 18 என்றும் அழைப்பர். உலகம் இயங்க காரணமான நீரை வழிபடுவதுதான் இதன் சிறப்பு.

தொட்டதெல்லாம் துலங்கும் என்ற சிறப்பிற்கு உரியது இந்த ஆடிப்பெருக்கு. நாம் எல்லோரும் பொங்கல், தீபாவளிக்குத் தான் புத்தாடைகள் அணிந்து கொண்டாடுவோம். ஆனால் நம் முன்னோர்கள் ஆடிப்பெருக்கிற்குத் தான் புத்தாடை அணிந்து உற்சாகமாகக் கொண்டாடினர்.

இந்த நன்னாளில் தான் விவசாயத்திற்குப் பொருள்கள் வாங்குவது, குலதெய்வ கோவிலுக்கு பொங்கல் வைத்துக் கொண்டாடுவது, கல்யாணமான பெண்களுக்கு சீர்வரிசை செய்வது, சுமங்கலிகள் தங்கள் தாலிக்கயிற்றை மாற்றுவது என அத்தனை மங்கலகரமான நிகழ்வுகளையும் செய்வார்கள்.

Aadi perukku
Aadi perukku

இத்தகைய சிறப்பு வாய்ந்த நாள் வரும் ஆகஸ்டு 3ம் தேதி வியாழக்கிழமை அன்று வருகிறது.

எல்லாம் சரி தான். ஆடி 18 அன்று ஆடிப்பெருக்காகக் கொண்டாடுவது ஏன் என்று சந்தேகம் எழலாம். கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிற மாதம் ஆடி மாதம். இந்த மாசத்துல 3 நட்சத்திரங்கள் வரும். பூசம், புனர்பூசம், ஆயில்யம். இதுல பூசம் நட்சத்திரம் சனி பகவானுக்கு உரியது.

சூரியன் வந்து சனியின் பிடியில் இருந்து பூசம் நட்சத்திரத்தில் இருந்து விடுபட்டு புதனுக்கு அதிபதியான ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறும் நாள் தான் இந்த 18ம் தேதி.

இந்த நாளில் சூரியனிடம் இருந்து ஒரு விதமான அற்புதமான சக்தி வெளிவரும். அதனால் தான் சூரிய உதயத்திற்குப் பிறகு படித்துறையில் இருந்து சூரியனை வழிபடுகின்றனர். சூரியனும் புதனும் நட்பு கிரகங்கள்.

அதனால் சூரியனிடம் இருந்து வரும் சக்தி மிகுந்த கதிர்கள் ஆடி மாதத்தில் விதைக்கப்படுகிற விதைகள் மேல் பட்டு புத்துணர்ச்சியையும், வலிமையையும் உண்டாக்கி பச்சைப் பசேல் என்று நல்ல விளைச்சலைத் தர வைக்கிறது.

Aadi perukku 2
Aadi perukku 2

அதனால் தான் ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்லியிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

Srirangam
Srirangam

அன்றைய தினம் நாம் தொடங்கும் செயலுக்கு ஏற்ற நாள் இந்த ஆடி 18. திருச்சியில் ஸ்ரீரங்கநாதர் தங்கை காவிரிக்கு யானையில் வந்து சீர் கொடுக்கும் நாள் இதுதான்.

அதனால் தான் திருச்சி காவிரி படித்துறையில் இந்த விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் அம்மா மண்டப படித்துறைக்கு எழுந்தருள்வார்.