கவலை இல்லாத மனிதன் தான் உலகில் கொடுத்து வைத்தவன் என்பார்கள். அப்படிப்பட்ட நிம்மதியை எவ்வளவு பணம் கொடுத்தும் விலைக்கு வாங்க முடியாது.
நம்ம வாழ்க்கையில் கஷ்டம் கவலை இல்லாம இருந்தால் அது தான் நமக்கு பெரிய சொத்து. அதற்கான விடைகள் யார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தருகிறார் என்றால் அவரே கடவுள். அவரே ஞானி. அவரே நல்ல நண்பன். நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய்…! என்ற உளவியல் உண்மையை உலகிற்கு எடுத்துரைத்தவர் தான் புத்தர்.
இவரது பொன்மொழிகள் நம் வாழ்க்கையை ஒரு தேர்ந்த சிற்பி போல் செதுக்குபவை.
மனிதன் மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது ஏன் என்று ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியவரும். அதற்கு புத்தர் சொல்லும் காரணம் இதுதான். அளவுக்கு அதிகமாக யோசிப்பதே இந்த கவலைக்குக் காரணம். இதனால் தேவையில்லாத சந்தேகமும், குழப்பமும் தான் உண்டாகின்றன.
நம்ம வாழ்க்கையே மாறணும் என்று எல்லோருமே ஆசைப்படுவோம். அந்த மாற்றம் வேண்டும் என்று நீங்கள் மனதார விரும்பினால் முதலில் உங்கள் மனதில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள். மனம் போல் வாழ்க்கை. எண்ணம் போல் வாழ்க்கை. உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள். இல்லாவிட்டால் அது உங்களை ஆளும் என்கிறார் புத்தர்.
பெரும்பாலானோர் மனம் போன போக்கிலே வாழ்ந்து விடுகின்றனர். இதுதான் கவலையை உண்டாக்குகிறது. மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் செய்யாமல் எது சரி, எது தவறு என புரிந்து செய்வது நமக்கு நிம்மதியைத் தரும். காதல், சொந்தம், நட்பு என அனைத்திலும் அன்பைத் தேடும் இதயங்களுடன் தான் அனைவரும் உள்ளனர்.
அவர்களுக்கு கௌதம புத்தர், புரிதல் எங்கே இருக்கிறதோ, அங்கு தான் அன்பு பிறக்கும். உறவில் புரிதல் இல்லை என்றால் அங்கு அன்பிற்கு இடமில்லை. சிந்தனையையும், செயலையும் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்கும் புத்தர் ஒரு விடை சொல்கிறார். மற்றவர்களிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. தன்னிடம் உள்ள குறைகளைக் கண்டுபிடிப்பது தான் கடினம் என்று.
நாம் செய்யும் தவறை உணர்ந்து விட்டால் போதும். திரும்பவும் அந்தத் தவறு வராமல் பார்த்துக் கொள்ளலாம். பிடிக்காத செயலை யாராவது செய்தால் நமக்கு படார் என கோபம் பொத்துக்கொண்டு வந்து விடும். இதற்கு புத்தர் என்ன சொல்கிறார் என பாருங்கள்.
கோபம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயோ கொடுத்துக் கொள்ளும் தண்டனை.
அதிக கோபமே மன அமைதியை அழிக்கிறது. மன அமைதியின்றி வாழ்வது நோயுடன் வாழ்வதற்குச் சமம். இது போல் தான் ஆசையும். அதிகம் இருந்தால் ஆபத்து. எதுவுமே அளவோடு தான் இருக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
புத்தர் வாழ்வை செம்மைப்படுத்துவதற்காக இந்த வரிகளைத் தான் கூறுகிறார்.
அழியும் பொருள் மீது
அழியா பற்றுடன் அலையும் மனமே
உன் உடலும் ஒரு நாள்
அழியும் என்று அறியாயோ…!
இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதைப் புரிந்து கொண்டு அதிகம் ஆசைப்படாமல் இருப்பதே அமைதியைத் தரும்.