தினம் தினம் தினம் தீபாவளி என்று ஒரு திரைப்படப்பாடல் உண்டு. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. தீபாவளி வருடத்திற்கு ஒருமுறை தான் வருகிறது என்றாலும் அதற்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. அதைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
10000 வருடங்களுக்கு மேலாக கொண்டாடப்படுகிறது தீபாவளி. இந்த திருநாளில், மகாலெட்சுமி, சரஸ்வதி தேவி, பூமாதேவி, மோகினிகள், கங்கை, மகாவிஷ்ணு, தன்வந்திரி, அமிர்தம் ஜீவாத்மா, பரமாத்மாஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுங்கள். சொந்தபந்தங்கள் நண்பர்களுடன் நேரத்தை இனிமையாக செலவிடுங்கள். சந்ததியருக்கு ஓர் அருமையான நினைவில் கொள்ளும் நாளாக தீபாவளியை உணர்த்திடுவோம்.
இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அனைவருக்கும் நிச்சயம் அளிப்பாள் என்று உறுதியாக நம்புவோம்.
தீர்க்கதமஸ் என்ற முனிவர் அவர் இருண்ட காட்டில் தனது மனைவி, மக்களுடன் வசித்தார். இருட்டினால் மட்டுமல்ல, துஷ்ட மிருகங்கள், விஷ ஜந்துக்கள், அரக்கர்களாலும் அவர்கள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள்.
எனவே அந்த இடம் ஒளிமயமாக வேண்டும் என விஷ்ணுவை நினைத்து பிரார்த்தித்தார். சனாதன முனிவர்கள் அங்கு வந்தனர். சனகாதி முனிவர்கள்தான் பிரம்மா உருவாக்கிய முதல் மனிதர்கள்.
அவர்களிடம் தீர்க்கதமஸ் சந்தேகம் ஒன்றை கேட்டார்.
மனிதன் துன்பமாகிய இருளிலிருந்து விடுபட விரதங்களை அனுஷ்டிக்கிறான். இந்த விரதங்களும் பட்டினி, உடலை வருத்தும் தவம், நேர்ச்சை ஆகியவையாகத் தான் உள்ளன. இவை மேலும் மனிதனை துன்பப்படுத்துகின்றன. மனமகிழ்ச்சிக்கு சுலபமான வழி ஏதும் இல்லையா? என கேட்டார்.
இதற்கு பதிலளித்த சனாதனர், தீவிர விரதங்களால் மட்டும் தான் ஒளிமயமான பரம்பொருளைக் காணமுடியும் என நமது வேதங்கள் வழி ஏதும் வகுக்கவில்லை.
தீர்த்தமாடி, புத்தாடை உடுத்தி, இனிப்பு பண்டங்களை சாப்பிட்டு, ஏழை எளியோர்க்கும் கொடுத்து, தீபங்கள் ஏற்றி, மனம் மகிழ்ந்து கொண்டாடுவதாலும் நாம் துன்பமாகிய இருளிலிருந்து சுலபமாக விடுபடலாம் என போதித்தனர்.
இந்த விரதத்தை எப்படி பின்பற்றுவது என்று தீர்க்கதமஸ் கேட்கவே, சனாதன முனிவர் (ஐப்பசி) மாதம் தேய்பிறையில் திரயோதசி அன்று மகாபிரதோஷ பூஜை செய்து, யமதீபம் ஏற்ற வேண்டும். எமதர்ம ராஜாவை மனதால் பிரார்த்தனை செய்து, அகாலமரணம் சம்பவிக்காமல் காக்கும்படி பிரார்த்திக்க வேண்டும்.
மறுநாள் நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும். எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப் பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.
எண்ணெயில் லட்சுமிதேவியும், அரப்புப்பொடியில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமிதேவியும், குங்குமத்தில் கவுரியும், புஷ்பத்தில் மோகினிகளும், தண்ணீரில் கங்கையும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்பு பண்டங்களில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறிகளில் ஜீவாத்மாவும் நமக்கு அருள்பாலிப்பார்கள்.
இவற்றிற்கு ஆரத்தி காட்டி வணங்கினால் அனைவரும் மனம் குளிர்ந்து ஆசி வழங்கி, நம் குடும்பத்தாரை இருளிலிருந்து ஒளிக்கு அழைத்துவருவார்கள் என்றார்.
இப்படித்தான் தீபாவளி திருநாள் முதலில் தோன்றியது.
தீபாவளித் திருநாளில், உலகிலுள்ள எல்லா நீர் நிலைகளிலும் புனித கங்கை ஆவாஹித்து இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
நரகாசுரன் அழிந்த துலா மாத சதூர்த்தசியில் நரகாசுரனைப் புனிதப்படுத்தி அவனுக்கு மோட்சமளிக்க, பகவான் கிருஷ்ணன் தன் சங்கு தீர்த்தத்தில் கங்கையை வரவழைத்தார்.
அப்போது அவர் சங்கல்பப்படி உலகிலுள்ள எல்லா நீர்பரப்பிலும் கங்கை அந்தர்யாமியாக வியாபித்தாள்.
அதனால் நரக சதுர்த்தசியன்று குளியல் செய்வதை, கங்கா ஸ்நானம் ஆயிற்றா? என்று சம்பிரதாயமாகக் கேட்கிறோம்.
ஆகவே அனைத்து நீரில் கங்கை வருகிறாள். தீபாவளியன்று அவளை வணங்கி நாம் நீராடினால் நம் பாவத்தை நம் தாயாக இருந்து அவள் போக்குவாள்.
தீபாவளி என்றாலே கும்பகோணம் சாரங்கபாணிதான். ஆராவமுதன் என்கிற லட்சுமி நாராயணன் திருமணம் செய்யாமல் இறைதொண்டு செய்து வந்தார். ஆராவமுதன் கிழக்கு பெரிய கோபுரத்தை மக்களிடமும் மன்னரிடமும் பணம் பொருள் வாங்கி கட்டியதாக சொல்லப்படுகிறது.
ஆராவமுதனுக்கு வயதான காலம் வந்தவுடன் மகாவிஷ்ணுவிடம் என் மறைவிற்கு பின்னர் யார்? என்னுடைய உடலுக்கு காரியம் செய்வார்? நான் திருமணம் செய்யாமல் உன்னை நினைத்து வாழ்ந்துவிட்டேன் எனக்கு யார் உள்ளார்? என புலம்பியது பெரிய பெருமாளின் காதில் விழுந்தது
அவர் ஆராவமுதுவிடம் நானே வந்து உனக்கு காரியம் செய்கிறேன் என்று சொல்லி தீபாவளி அன்று இறைவனடி சேர்ந்தவுடன் காரியம் செய்தார்.
பெருமாள் சாரங்கபாணி சுவாமி வருடா வருடம் மனிதனாய் பிறந்த ஆராவமுதன் என்கிற லெட்சுமி நாராயணனுக்கு தீபாவளி அன்று காரியம் தவறாது செய்கிறார்.
தீபாவளி மதியம் வரை சாரங்கபாணி சுவாமி கோவிலுக்குள் பக்தர்கள் இறைவனை காண அனுமதிக்கபட மாட்டார்கள்.
தீபம் என்றால் ஒளி, விளக்கு. ஆவளி என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருவர் மனதிலும் இருள் உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கனம் போன்றவற்றை அகற்ற வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.
ராமாயண இதிகாசத்தில், ராமர், ராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் லட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப்படுவதாக கருதப் படுகிறது.
கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதார கௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று அர்த்தநாரீஸ்வரர் உருவமெடுத்தார்.
மகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்
ரண்யாட்சன் என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்து விட்டனர்.
அதனை மீட்டெடுக்க மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். அப்போது பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்.
அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம் ஏற்படாது என வரம் பெற்றான்.
இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தின் காமரூபா எனும் ராஜ்ஜியத்தை ஆண்டு வந்தவன். இன்றும் அஸ்ஸாம் மக்களிடையே நரகாசுரனைப் பற்றிய பல்வேறு கதைகளும், இலக்கியத்திலும் இருக்கிறார்.
பாணாசுரன் என்பவனுடன் ஏற்பட்ட நட்புறவால் நரகாசுரன் தீமைகளைச் செய்ய ஆரம்பித்தான்.
பாணாசுரன் தற்போதைய அஸ்ஸாம் மாநிலத்தின் மத்தியில் அமைந்திருக்கும் சொனித்பூரை (தற்போது தெஸ்பூர்) ராஜ்ஜியமாக கொண்டவன் என கூறப்படுகின்றது. பல ராஜ்ஜியங்களின் மீது போர் தொடுத்து தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தான்.
பின்னர், சுவர்க லோகங்களின் மீதும் போர் தொடுக்க ஆரம்பித்தான். அக்கிரமங்களுக்கும் அநியாயங்களுக்கும் உவமையாக நரகாசுரன் காட்டப்படுகின்றான்.
இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான்.
இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான். நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலை கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர்.
கவலைப்படாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன் என்றார் கிருஷ்ணர். அவர் எல்லாம் அறிந்தவர். நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான். நரகாசுரனும் அதற்கு விதிவிலக்கல்ல. அவன் காது கொடுத்தேக் கேட்கவில்லை.
போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள்.
அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு முராரி என்ற பெயர் வந்தது.
கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் கதையை வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்,
ஆனால் காரணம் இல்லாமல் காரியம் செய்வாரா நம் கண்ணன்? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறு கொண்டு எழுந்தாள்.
என் கண்ணனுக்கா இந்த நிலை என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான்.
அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான் அப்போது தான் அவன் தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்.
ஒருவர் இறந்தபின் செய்யும் எண்ணைக் குளியல் புனிதமாக்கப்பட வேண்டும். இன்றைய தினத்தில் செய்யப்படும் எண்ணைக்குளியலின் எண்ணையில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும்.
இந்த நாளில் ஒவ்வொருவர் வீட்டுத் தண்ணீரிலும் கங்காதேவி எழுந்தருள வேண்டும் என வரம் வேண்டி அதனைப் பெற்றுக் கொண்டார்.
தீபாவளி அமாவாசை அன்று வருவதால் தீது பாவ வழி என்று அசைவ உணவுகளை தவிர்த்து புத்தாடை, இனிப்பு வகைகள், பலகாரங்கள், நல்ல அறுசுவை சைவ உணவுடன் பட்டாசுகள் வெடித்து. கொண்டாடுவது தான் சிறப்பு.
1577ல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகின்றனர்
தீ ஆவளி சித்தர்கள் உருவாக்கிய திருநாள். கார்த்திகைக்கு அகல் விளக்குகளை வழிபாடு செய்வது போல்; தீ ஆவளிக்கு குத்து விளக்கு ஏற்றியும், தீ வளர்த்தும் ஜந்தீஸ ஒளியை வழிபடுவதுதான் தீ ஆவளித் திருநாள். இந்த ஒளி வணக்கமே இம் மண்ணுலகை அண்டபேரண்டங்களோடு இணைக்கிறது.
பாற்கடலில் தோன்றிய மகாலட்சுமி திருமாலுக்கு மாலை போடத் தீர்மானித்தாள். இதை உணர்ந்த மகாவிஷ்ணு மறைந்து ஓடினார். மகாலட்சுமி பின் தொடர்ந்து விடாமல் ஓடினாள்.
அவனது பாதம் பட்டு எள்ளுச் செடிகள் சிதைந்து எண்ணெய் கசிந்தது. திருமாலைத் தேடி அவருக்கு ஸ்ரீதேவி மாலையிட்ட நாள் தீபாவளித் திருநாள். அன்று எண்ணெயில் வாசம் செய்வதாக எள்ளுச் செடிக்கு வரமளித்தான்.
அருள் ஞான இருள் விலகி, ஞான ஒளி பரவ தீமைகள் அழிய குடும்பத்தில் மங்களங்கள் பொலிய எல்லோரும் தீபமேற்றி வழிபடும் திருநாளே தீபாவளித் திருநாள்.
மகாபலிச்சக்கரவர்த்தி பூவுலகிற்கு வந்த நாள் ஒரு தீபாவளித் திருநாள். ஆதிசங்கரர் ஞானபீடம் நிறுவிய நாள் தீபாவளி திருநாள். விக்ரமாதித்தன், மகாபலி, நரகாசுரன் மகன் பகதத்தன் ஆகியோர் முடிசூட்டிக் கொண்டு அரியணை ஏறிய நாள் ஓர் தீபாவளி திருநாள்.
குபேரன் தான் இழந்த தன் நிதிகளை திரும்பப் பெற்றதும் தீபாவளி தினத்தில்தான்.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.