பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே எல்லாரும் அவரவர் சாஸ்தாவைத் தேடி வழிபடச் செல்வர். அந்த வகையில் சாஸ்தான்னா யாரு? வழிபட்டா என்ன பலன்கள்? எத்தனை பேரு இருக்காங்கன்னு பார்ப்போம்.
வடமொழியில் ‘சாஸ்தா’ என்றால் ‘கட்டளை இடுபவர்’ என்று பொருள். வேதம், ஆகமம் எல்லாம் சாஸ்திரங்கள். இதெல்லாம் கட்டளை இடும். அதனால் சாஸ்திரத்துக்கும் சாஸ்தா என்ற பெயர் உண்டு. அப்பியாசம் என்றால் யோகம். இதற்கும் சாஸ்தா என்று பொருள் உண்டு.
இதை எல்லாம் பார்க்கும்போது சாஸ்தாவுக்கு என்ன அர்த்தம்னா உயிர்களை செம்மையாக வழிநடத்துபவன் என்று பெயர். கடவுளாகவும், உருவாகவும் இருந்து நம்ம பக்கத்துலயே இருந்து வழிநடத்துபவர். அந்தக் காலத்தில் யுத்தம் நடத்தும்போது படைகளை வழி நடத்துபவர் சேனாதிபதி.
அவரைப் போல நம்மை நடத்திச் செல்பவர் சாஸ்தா. வேதம், ஆகமம் இந்த இரண்டும்தான் சாஸ்திரம். திருமூலரே இரண்டு நூல் என்பார். பொதுவும் சிறப்புமாம் எனச் சொல்வார். ஆகமம் என்பது கோவில் வழிபாட்டு முறைகளை விளக்கிச் சொல்வது. கோவிலில் ஆகம முறைப்படி பூஜை பண்றோம்.
நாம் என்ன வேண்டுகிறோமோ அந்த சாஸ்திரங்கள் அதை வழி நடத்திக் கொடுக்கும். சாஸ்தா என்ற சொல்லுக்கு சாஸ்திர ஞானம் படைத்தவர் என்று பொருள். அந்த வகையில் அவர் 18 வகையான வித்தைகளையும் அறிந்து நமக்கு அறிவிக்க வல்லவர் சாஸ்தா. அதனால்தான் 18 படிகளையே வைத்துள்ளார். யோகபட்டயம் அணிந்து இருப்பார் சாஸ்தா. யோகத்தை மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பதால் யோக சாஸ்தான்னு சொல்வாங்க.
உலகில் நடைபெறும் செயல்களை வாழ்வியலுக்காக அறத்தோடு விளக்கிச் சொல்பவர் தர்ம சாஸ்தா. வெறும் சாஸ்தா என்றால் கட்டளை இடுபவர். வேத ஞானத்தை அறிமுகப்படுத்துகிறார். எல்லாருக்கும் சொல்லிக் கொடுக்கிறார்னா அதுக்கு பிரம்ம சாஸ்தா என்று பெயர்.
அந்த வகையில் 4 விதமான சாஸ்தாக்கள் இருக்கின்றனர். பிரம்ம சாஸ்தா, தர்ம சாஸ்தா, யோக சாஸ்தா, சாஸ்தா. இந்த நாலு வகையான சாஸ்தாக்களையும் நாம் வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைத் தருவார்.
இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை பங்குனி உத்திர திருநாள் வருகிறது. அனைவரும் சாஸ்தாவை மறக்காமல் வழிபட்டு வாழ்வில் வளம் பல பெறுவோம்.