பங்குனி உத்திரம் வந்துவிட்டாலே குலதெய்வ வழிபாடு, சாஸ்தா கோவில்னு மக்கள் படையெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த இரு நாள்களும் ஊரெங்கிலும் திருவிழாக்கோலமாகத் தான் இருக்கும். எங்கெங்கு இருந்தாலும் மறக்காமல் தனது சொந்த ஊருக்கு வந்து சாஸ்தா கோவிலுக்குக் குடும்பத்தோடு சென்று வழிபடுவர். ஆண்டுக்கு ஒருமுறை தான் அவரை நினைக்கிறோம். வழிபடுகிறோம் என்பதால் இந்த திருநாளுக்குக் கூடுதல் சிறப்பு உண்டு.
பொதுவாக ஊரின் எல்லையில் தான் சாஸ்தா கோவில் காவல் தெய்வமாக இருக்கும். அந்த இடத்திற்குச் சென்று புதர் மண்டிக்கிடந்தால் இரு நாள்களுக்கு முன்பே வந்து சுத்தம் செய்து திருவிழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் வரும் ஏப்ரல்11ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று பங்குனி உத்திரம் வருகிறது. தொடர்விடுமுறை தினமாக வரும் என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
சாஸ்hதாவுக்கும் குலதெய்வத்துக்கும் என்ன வேறுபாடு? பலருக்கும் எழும் கேள்வி தான் இது. பொதுவாக சாஸ்தாவை ஐயனார் என்றும் சொல்வார்கள். சிலர் முழுமுதற் கடவுளாக வழிபடுவர். சிலர் பிரமனாகவும் வழிபடுவர். சிவன் கோவில் பிரகாரத்தில் சாஸ்தா என்று போடப்பட்டு இருக்கும். சாஸ்தாவின் சக்தி வெளிப்பாடுகள் தான் குலதெய்வங்கள்.
சிலருக்கு சாஸ்தா ஐந்து வீட்டு அய்யனார், பாடகலிங்க சாஸ்தா, துரையப்ப சாஸ்தா என ஒரு பெயரிலும், குலதெய்வம் பொதுவாக அம்மன், பேச்சி அம்மன், விடுமாடன், பலவேசக்காரன், புலமாடன், முனீஸ்வரன், கருப்பசாமி, தூண்டிகாரன், வீரன் என்ற பெயர்களிலும் இருக்கும். அது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. சாஸ்தாவை வழிபட்டால் குலதெய்வத்தின் அருளும் நமக்கு சேர்ந்து கிடைக்கும். சாஸ்தா கோவிலுக்குப் போனாலே அங்கு குலதெய்வத்தின் சிலையையும் பார்க்கலாம்.