நவராத்திரி அன்று நம்மால் முடிந்த அளவு உதவிகளைப் பிறருக்குச் செய்யலாம். குறிப்பாக தாம்பூலப்பையைக் கொடுப்பதன் மூலம் பல நற்பலன்கள் கிட்டுகின்றன. வசதியுள்ளவர்கள் இதைக் கொடுக்கலாம்.
கொடுக்க கொடுக்கத் தான் நமக்குக் கொடுக்கும் அளவு செல்வம் பெருகும் என்பார்கள். இது
அனுபவசாலிகளின் கருத்து. இங்கு நாம் தாம்பூலப்பைக் கொடுப்பதன் பலன்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தாம்பூலப்பை என்பது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.
வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், சீப்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, வளையல், மஞ்சள் கயிறு, தேங்காய், பழம், பூ மருதாணி, கண் மை, தட்சணை, ரவிக்கைத்துணி அல்லது புடவை.
ஏன் இவ்வளவு பொருள்களைக் கொடுக்கிறார்கள். ஏனென்றால் நாம் கொடுக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. தாம்பூலம் என்பது வெற்றிலை, பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர்.
வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர். மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.
சீப்பு கணவனின் ஆயுளை விருத்தி செய்கிறது. கண்ணாடி கணவனின் ஆரோக்கியம் காக்கிறது. வளையல் மன அமைதி பெற வழிவகை செய்கிறது.
தேங்காய் பாவத்தை நீக்குகிறது. பழம் அன்னதானப் பலன் கிடைக்கச் செய்கிறது. பூ மகிழ்ச்சி பெருகச் செய்கிறது. மருதாணி நோய் வராதிருக்க வழிவகை செய்கிறது. கண்மை திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்கச் செய்கிறது. தட்சணை லக்ஷ்மி கடாக்ஷம் பெருகச் செய்கிறது. ரவிக்கைத் துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய வழங்குகிறோம்.
மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில் அது ஆடம்பரத்திற்காகவும் தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே.
தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதற்காகத்தான் தவிர ஆடம்பரத்தைக் காட்ட அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள்.
தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவராக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் ஜாதி பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பதற்குச் சமம்.
வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் மற்றும் அந்தஸ்து வேறுபாடு காட்டக்கூடாது. பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்திற்குள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள்.
தாம்பூலம் கொடுக்கிற சுமங்கலியும் வாங்கும் சுமங்கலியும் இந்த முறைகளை கடைபிடிக்கும் போது மூன்று தேவியரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த முறையை நானும் தெரிந்து உங்களுக்கும் பகிர்ந்து கொண்டது அம்பாளின் அனுக்கிரகம் என்றே சொல்லலாம். நாமும் சந்தோஷமாக இருப்போம். நம்மை சுற்றி உள்ளவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்.