அண்டத்தில் உள்ளதே பிண்டத்தில் என்று சொல்வார்கள். பஞ்சபூதங்களால் ஆனதுதான் அண்டம். நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பதே பஞ்சபூதங்கள். அதெப்படி நம் உடலில் இருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. மண்ணை பிருத்வி என்கிறார்கள்.
அதில் எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் ஆகியவை அடங்கி விடுகிறது. மண்ணில் மண் சேர்ந்தால் எலும்பு. மண்ணுடன் நீர் சேர்ந்தால் தசை, மண்ணுடன் நெருப்பு சேர்ந்தால் தோல், மண்ணுடன் வாயு சேர்ந்தால் நரம்பு, மண்ணுடன் ஆகாயம் சேர்ந்தால் மயிர் என்று யூகி வைத்திய சிந்தாமணி என்ற நூல் குறிப்பிடுகிறது.
அதே போல நீரைப் புனல் என்கின்றனர். நீரில் ரத்தம், விந்து, சிறுநீர், மூளை, கொழுப்பு ஆகியவை அடங்கும். நீருடன் நீர் சேர்ந்தால் சிறுநீர், நீருடன் மண் சேர்ந்தால் உமிழ்நீர், நீருடன் நெருப்பு சேர்ந்தால் வியர்வை, நீருடன் வாயு சேர்ந்தால் ரத்தம், நீருடன் ஆகாயம் சேர்ந்தால் விந்து என சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நெருப்பை அக்னி, தேயு என்பர். உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் ஆகியவை அடங்கும். நெருப்புடன் நெருப்பு சேர்ந்தால் தூக்கம், நெருப்புடன் மண் சேர்ந்தால் பசி, நெருப்புடன் நீர் சேர்ந்தால் தாகம், நெருப்புடன் வாயு சேர்ந்தால் அச்சம், சோம்பல் உண்டாகிறது. நெருப்புடன் ஆகாயம் சேர்ந்தால் ஆசை, சேர்க்கை உருவாகிறது.
காற்றை வளி என்பர். ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல் ஆகியவை அடங்கும். வாயுடன் வாயு சேர்ந்தால் ஓடுதல், வாயுவுடன் மண் சேர்ந்தால் படுத்தல், வாயுவுடன் நீர் சேர்ந்தால் நடத்தல், வாயுவுடன் நெருப்பு சேர்ந்தால் உட்காருதல், வாயுவுடன் ஆகாயம் சேர்ந்தால் தாண்டுதல், குதித்தல் ஆகியவை நடைபெறும்.
ஆகாயத்தை விண் என்பர். இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்) ஆகியவை அடங்கும். ஆகாயத்துடன் ஆகாயம் சேர்ந்தால் மோகம், ஆகாயத்துடன் மண் சேர்ந்தால் ராகம், ஆகாயத்துடன் நீர் சேர்ந்தால் துவேஷம், ஆகாயத்துடன் நெருப்பு சேர்ந்தால் பயம், ஆகாயத்துடன் வாயு சேர்ந்தால் நாணம் உண்டாகிறது. மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவாகிறது. நரம்புகள் அதிவேகமாக செயல்படுகிறது. தசைகள் இறுக்கமாகின்றன.
சைவ சமயத்தில் பஞ்சபூதங்களுக்கும் கோவில்கள் உள்ளன. காஞ்சிபுரத்தில் மண், திருவாணைக்காலில் நீர், திருவண்ணாமலையில் நெருப்பு, காளஹஸ்தியில் காற்று, சிதம்பரத்தில் ஆகாயம் என்ற வகையில் அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்கின்றனர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



