திருப்பதிக்கு சென்றால் திருப்பம் வரும் என்ற காரணத்துக்காக தான் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், திருப்பதி சென்று வந்த பிறகும் திருப்பம் வரவில்லை என ஏராளமானோர் புலம்பும் நிலையில் உள்ளனர்.
திருப்பதிக்கு சென்று சாதாரணமாக சாமியை பார்த்துவிட்டு வந்தால் எந்த திருப்பமும் வராது. திருப்பதி செல்வதற்கு முன்பும் திருப்பதி சென்ற பின்னரும் சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்போதுதான் திருப்பதி சென்றதற்கான முழு பலன் கிடைக்கும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். அவை என்ன என்பதை பார்ப்போம்.
முதலில், திருப்பதி செல்வதற்கு முன்பே ஏழுமலையானுக்கு மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைக்க வேண்டும். நாங்கள் எந்த காரியத்திற்காக திருப்பதி வருகிறோம் என்பதையும் அந்த காணிக்கையில் வேண்டிக்கொள்ள வேண்டும். அதேபோல், திருப்பதி செல்வதற்கு முன்பே ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கி, குலதெய்வம் சென்று வணங்கி விட்டு அதன் பிறகு தான் அந்த காணிக்கையை எடுத்துக்கொண்டு திருப்பதிக்கு செல்ல வேண்டும்.
நேராக திருப்பதிக்கு செல்லாமல், திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு முன்பே திருச்சானூர் அலமேலு மங்கை தாயார் ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும். அதன் பின்னர், கீழ் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு, மூன்றாவது ஆக தான் திருப்பதிக்கு மலை ஏற வேண்டும்.
திருப்பதி மலை ஏறியவுடன் உடனே தரிசனத்திற்கு செல்லாமல், தீர்த்தவாரியில் புனித நீராடி, திருப்பதியில் ஆதி தெய்வமான ஆதி வராக மூர்த்தியை வணங்க வேண்டும். அதன் பின்னர் தான் பெருமாளை சந்திக்க வேண்டும்.
எந்த நாளில் திருப்பதிக்கு சென்றாலும் விசேஷம் தான். ஆனாலும், சனிக்கிழமை அன்று திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது கூடுதல் விசேஷத்தை தரும் என்று கூறப்படுகிறது. நீங்கள் வேண்டிக் கொண்டது எதுவாக இருந்தாலும், சனிக்கிழமை அன்று சென்றால் நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
இவ்வாறு திருப்பதிக்கு முறையாக சென்றால், கண்டிப்பாக வாழ்க்கையில் திருப்பம் ஏற்படும் என்பது பெரியோர்கள் கூறியுள்ளனர்.