முருகப்பெருமானின் அறுபடைவீடுகளுள் 2வது படைவீடு திருச்செந்தூர். செந்திலாண்டவர், சுப்பிரமணியசுவாமி, ஜெயந்திநாதராக முருகப்பெருமான் காட்சி தரும் அற்புதமான திருத்தலம் இது. இந்த முருகனை வழிபடுவதால் வாழ்வில் என்னென்ன நலன்கள் உண்டாகும் என்று பார்க்கலாமா…
பிறவி என்கின்ற பெருங்கடலில் தத்தளிக்கும் நமக்கு பிறவாமையை அருள்வார் செந்திலாண்டவர்.
சுவாமி என்றாலே அது முருகப்பெருமான் தான். சுப்பிரமணியர் என்ற நாமம் தான் வேதத்தால் ஓதப்பட்டது. அதனால் தான் இங்கு முருகப்பெருமான் பூஜா மூர்த்தி என்ற பெயரால் வழங்கப்படுகிறார். பூ என்றால் பூர்த்தி செய்தல். ஜா என்றால் உண்டாகுதல். பல மாய கர்மங்களைப் பூர்த்தி செய்து சிவஞானத்தை உண்டாக்குபவர் பூஜா.
திருச்செந்தூரில் நீங்கள் பார்க்கும் போது அவரது கையில் ஒரு மலர் இருக்கும். பஞ்ச லிங்கங்களை வைத்து பூஜை செய்கிறார் முருகப்பெருமான். ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யாஜகம் என்கின்ற 5 லிங்கங்கள் தான் பஞ்சலிங்கம்.
கையில் உள்ள மலர்களைக் கொண்டு ஒவ்வொரு மந்திரமாக சொல்லி தனது தந்தையான சிவபெருமானை அர்ச்சிக்கின்றார். தேவர்கள் அழைத்ததும் சற்றும் தாமதிக்காமல் உடனே போகவேண்டுமே…இப்ப தான் சூரசம்ஹாரம் செய்து வந்துள்ளோம்…என்னாச்சோ…ஏதாச்சோன்னு…கையில் உள்ள மலரோடு டக்கென்று திரும்பிக் காட்சி கொடுத்தார்.
அதனால்தான் திருச்செந்தூர் மூலவர் கையில் இன்றும் மலர் இருக்கும். அந்த பெருமானுக்குப் பெயர் பூஜா மூர்த்தி. மல, மாயக் கன்மங்களைப் பூர்த்தி செய்து சிவஞானத்தை உண்டாக்குபவர். இவர் தான் ஜெயந்திநாதராகவும் நமக்கு அருள்புரிகின்றார்.
வெற்றியைத் தருபவர். திருச்செந்தூர் முருகனைப் போய் பார்த்தால் நீங்கள் ஒரு உண்மையை உணரலாம். அங்கு கோவிலுக்குப் போகும்போது மூலவரைப் பார்க்கும் வரை நாம் இறங்கியே செல்ல வேண்டியிருக்கும்.
அப்படி தான் பாதை போடப்பட்டு இருக்கும். மூலவரைப் பார்த்து விட்டு நீங்கள் எந்தப் பாதை வழியாக வெளியே வந்தாலும் ஏறித் தான் போக வேண்டும். உங்கள் பாதை உயர்ந்தே காணப்படும்.
நீங்கள் எந்த அளவுக்கு வாழ்வில் இறங்கி வருகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களது வாழ்க்கை ஏறுமுகமாகத் தான் இருக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே திருச்செந்தூர் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.