முத்துமாநகராம் தூத்துக்குடியில் பனிமயமாதா கோவில் அன்று முதல் இன்று வரை புகழ்பெற்று நிலைத்து நிற்கிறது. சாதி, மதம், இனம் கடந்து ஒரு கோவிலுக்குச் செல்கிறார்கள் என்றால் அந்தப் பெருமை முத்துநகர் பனிமயமாதா கோவிலையேச் சாரும்.
தங்கத்தேர் பவனியைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த திருவிழா இன்று (ஆக.5) நடைபெறுகிறது.

உலகப்பிரசித்திப் பெற்ற இந்த ஆலயத்தில் இது 441வது திருவிழா. கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. 12 நாள்கள் இந்தத் திருவிழா கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது. இதற்காக இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொள்கின்றனர்.
1500 ஆண்டுகள் பழமையான ஆலயம் இது. இன்று அதிகாலை 5 மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியும் நடந்தது.
உலக நன்மை, உலக சமாதானம், கல்வி மேன்மை, வியாபாரிகள், மீனவர்கள், பனைத் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்களுக்கு என விசேஷ திருப்பலிகள் நடைபெறுகிறது.
நகரின் முக்கிய வீதிகளில் இன்று பனிமயமாதா அன்னையின் திருவுருவ தங்கத் தேர் பவனி நடைபெறுகிறது. இங்கு பால், பழம், பேரீச்சம்பழம் நேர்ச்சை பொருள்களாகப் படைக்கப்படுகின்றன.

இந்த தங்கத் தேர் திருப்பலியை கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினாய்க் பிலிப் நேரி நடத்துகிறார். இன்று தங்கத் தேர் பவனி நடப்பதால் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை.
இது 16வது தங்கத் தேர் திருவிழா. காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. 10 வருடங்கள் கழித்து நடக்க இருப்பதால் இந்தத் திருவிழாவிற்கு ஏராளமாக பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த விழாவிற்காக இன்று மாவட்டம் முழுவதும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



