திருவாரூர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தேர் தான். தியாகராஜர் ஆராதனை நடைபெறும் தலமும் இதுதான். இத்தலத்திற்கு ஷேத்திரபுரம் என்ற பெயரும் உண்டு. திருவாரூரில் தேர் அழகு என்பதால் தான் திருவாரூர் தேரழகா என்ற பாடலே வந்தது.
சைவ சமயத்தின் தலைமையிடம், சர்வதோஷ பரிகார தலம் என்றால் அது திருவாரூர் தான். இங்கு பங்குனி உத்திர நிறைவு விழாவாக ஆழித்தேரோட்டம் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு
பிரம்மன் தன் படைப்புத் திறம் தோன்ற தான் படைத்த தலங்கள் எல்லாவற்றையும் ஒரு தட்டிலும், இத்தலத்தை ஒரு தட்டிலும் வைத்து சீர் தூக்கிப் பார்த்தான்.
மற்ற தலங்கள் இதற்கு கொஞ்சம் கூட ஒத்துப்போகவில்லை. அதனால் தான் இத்தலத்திற்கு திருவாரூர் என்று பெயர்.
இறைவன் ஆடகேசர் ஆகவும், இறைவி ஞானசுந்தரி அம்மை ஆகவும் எழுந்தருளியுள்ளனர். அதனால் இத்தலத்திற்கு ஆடகேசரபும் என்றும் ஒரு பெயர்
உண்டு.
முதன்முதலில் இத்தலத்தை சக்திபுரம் என்றே அழைத்தனர். அடேயப்பா ஒரு தலத்திற்கு தான் எத்தனை பெயர்கள் என்று தானே கேட்கிறீர்கள்? பெயர் வைத்தால் அதற்கு காரணம் இல்லாமல் இருக்காது அல்லவா? என்னன்னு பார்ப்போம்.
தேவர்கள் பலருடன் பிரம்மன் யாகம் செய்தார். அதனால் தேவயாகபுரம் என்றும் பெயர் உண்டு. முருகன் தன்னை வழிபடும் அடியார்களுக்கு அருள்புரிந்து காத்து வருவதால் கந்தபுரம் என்றும் பெயர் உண்டு. முசுகுந்த சோழன் இந்திரனிடம் இருந்து தியாகேசரைப் பெற்று இங்கு கொண்டு வந்து நிறுத்தி திருவிழா போன்றவற்றை செம்மையாக நடத்தினார். அதனால் இந்த தலத்திற்கு முசுகுந்தபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு.
ஜனகுமாரர் போன்ற முனிவர்கள் கலியுகம் வருவதற்குப் பயந்து நடுங்கினர். அதே நேரம் பிரம்மன் இத்தலத்திற்கு வந்து இறைவனை பூஜித்து வழிபட்டதால் கலி இங்கு நிகழாது என்று கூறினார். அதனால் இந்த தலத்திற்கு கலிசெலா நகரம் என்றும் பெயர் உண்டு.
இறைவன் இறைவியுடன் அநாதிகாலம் தொட்டு பூமியின் கீழ் யாருக்கும் அறிவு அரிய திருவுருவாய் அமர்ந்திருந்ததால் அந்தர கேசுபுரம் என்றும் இந்திரன் உண்டாக்கிய புற்றில் பெருமாள் இடம் கொண்டு எழுந்தருளியதால் வன்மீகநாதபுரம் என்றும் பெயர்.
வன்மீக நாதரை எப்போதும் தேவர்கள் வழிபடுவதால் தேவாசிரியபுரம் என்றும் சமர்க்காரன் என்ற அரசன் காத்து வந்ததால் சமற்காரபுரம் என்றும் பெயர். விராட்புருடனுக்கு மூலாதாரமாக இருப்பதால் மூலாதாரபுரம் என்றும் திருமகளும், நிலமகளும் வழிபட்டு பேறு பெற்றமையால் திருவாரூர் என்றும் கமலாயபுரம் என்றும் பெயர் உண்டு.
சிறப்புகள்
தேவலோகத்தில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களும் பெரும் தவம் செய்து தியாகேசன் திருவருளால் இத்தலத்தை அடைந்தன. இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை ஆகிய புண்ணியம் செய்தவர்கள் இம்மையில் நிரதி சயானந்தப் பேறும் எய்துவர்.
இங்கு வந்து மந்திர ஜெபம் செய்தவர்கள் ஒன்றுக்குப் பத்தாகப் பலன் பெறுவர். தானம், தவம் செய்தவர்கள் வான் உலக இன்பத்தை வெறுத்து சிவஞான பேறு பெறுவர்.
எண்ணற்ற பாவங்களைச் செய்தவர்கள் கூட இத்தலம் வந்து வழிபடுவதால் முக்தி பெறுவர். இத்தலத்தை ஒரு முறை நோக்கினாலும், அடைய எண்ணினாலும், அடைந்தாலும் பிறவிக்கடல் நீங்கி இன்ப வாழ்வு வாழலாம்.
அதனால் தான் இத்தலத்திற்கு ஒத்ததும், உயர்ந்ததும் இல்லை என்று சொல்வர். பிறந்தாலே முக்தி தரும் என்பதால் அன்பர்கள் பலரும் இத்தலத்தில் 10 மாதங்கள் தங்கி அப்பேற்றைப் பெறுவார்களாம்.
இத்தலம் தென்னிந்தியக் கட்டடக் கலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அமைவிடம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு பெற்ற தலம் திருவாரூர். இங்குள்ள ரயில் நிலையத்தில் இருந்து வடக்கே ஒரு மைல் தூரத்தில் கோவில் உள்ளது. இத்தலத்திற்கு வடக்கே சுக்கானாறும், தெற்கே ஓடம்போக்கி ஆறும் அழகுக்கு அழகு சேர்க்கின்றன.