சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட மிகவும் பழமையான கோவில். ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவர் இங்கு தவமிருந்து சிவனின் காட்சியை பெற்றதால் இத்தலம் இருக்கும் ஊர் திருவான்மீகம் என்று அழைக்கப்பட்டு வந்தது. பின்னாளில் இது மருவி திருவான்மியூர் ஆனது.
மருந்தீஸ்வரர்
இக்கோவிலின் மூலவர் தியாகராஜர் எனவும் அம்பாள் திரிபுரசுந்தரி எனவும் அழைக்கப்படுகின்றனர். தமிழ் முனி அகத்தியருக்கு இத்தலத்தில் சிவபெருமான், மனிதர்களின் நோய் தீர்க்கும் மூலிகைகளின் குணங்களையும், அதைக்கொண்டு மருந்து செய்யும் முறைகளையும் கற்றுத்தந்ததால் இத்தல சிவபெருமான் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தல புராணங்களின் படி வசிஷ்ட முனிவர் இத்தல சிவபெருமானை பூஜிக்க, இந்திரன் தனது தேவலோக பசுவான காமதேனுவை முனிவருக்கு தந்தார். ஒரு முறை சிவபூஜைக்கு பால் தராமல் போன காமதேனுவை வசிஷ்டர் சபித்து விட்டார். இதனால், தனது சக்திகள் அனைத்தையும் இழந்த காமதேனு, பூலோக பசுவாக மாறியது.
பால்வண்ணநாதர்
வசிஷ்டரிடம் தன் சாபம் போக்குமாறு காமதேனு வேண்டி நின்றது. இத்தல சிவபெருமானை பூஜித்தால் மீண்டும் இழந்த சக்திகள் அனைத்தையும் பெற முடியும் என வசிஷ்டர் கூறினார். அதன்படியே காமதேனுவும் தினமும் சிவலிங்கத்தின் மீது பால் சொரிந்து, வழிபட்டு தனது சக்திகளை மீண்டும் பெற்றது.
இதனால் இங்குள்ள இறைவனுக்குப் பால்வண்ணநாதர் என்ற ஒரு பெயரும் உண்டு. அப்பைய தீட்சிதர் என்ற பக்தர் ஒருவருக்கு காட்சி தருவதற்காக திரும்பியதால், இந்த ஆலய சிவபெருமான் மேற்கு திசையை பார்த்தவாறு இருக்கிறார்.
இங்கு தவமியற்ற வந்த வால்மீகியை கண்டு மிரண்ட காமதேனு இக்கோவிலின் சிவலிங்கத்தின் மீது குதித்து ஓடியது. அதனால் ஏற்பட்ட காமதேனுவின் கால் குளம்பு அடையாளத்தை இன்றும் சிவலிங்கத்தின் மீது காண முடிவதாக கூறப்படுகிறது.
தீராத நோய் தீர்க்கும் விபூதி
தினமும் இங்கிருக்கும் இறைவனுக்கு கோ பூஜையுடனே மற்ற பூஜைகளும் செய்யப்படுகிறது.ப் இந்த கோவிலின் கர்ப்பகிரகத்திற்கு மேலிருக்கும் விமானம் சதுர்வஸ்தம் என்ற முறையில் கட்டப்பட்டது. இங்கு கோவில் கொண்டிருக்கும் மருந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்ட பின்பு, பிரசாதமாக தரப்படும்.
விபூதியை உண்பதால் எப்படிப்பட்ட தீராத நோய்களும் குணமாகி விடுமாம். மேலும், இத்தல விருட்சமான வன்னி மரத்தைச் சுற்றி வந்து வழிபடுவதால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கி முக்திக்கான வழி கிடைக்கும் என்பது ஐதீகம். வேண்டுதல்கள் நிறைவேறியவர்கள் இந்த ஆலயத்தின் இறைவனுக்கும், இறைவிக்கும் புதுவஸ்திரம் சாற்றி வழிபட்டு வருகின்றனர்.
அமைவிடம்
சென்னை புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில்.