108 திவ்யதேசங்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் ஸ்ரீசௌமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இங்கு வீற்றிருக்கும் பெருமாள் பேரழகு கொண்டவர் என்பதால் இங்கிருக்கும் பெருமாளுக்கு சவுமியநாராயணர் எனப்பெயர் வந்தது. பொதுவாக எல்லா கோயில்களிலும் உற்சவர் சிலைகள் பஞ்சலோகத்தால் ஆனதாக இருக்கும். ஆனால், இக்கோவிலில் தூய்மையான வெள்ளியால் ஆனதாய் இருப்பது சிறப்பு. இதை தேவலோக இந்திரனே தந்ததாக நம்பப்படுகிறது. அதனாலாயே, இப்பெருமானை திருமங்கையாழ்வார் வெள்ளியான் கரியான் மணிநிற வண்ணன் என பாடி வைத்துள்ளார். மகாமகக்கிணறு என்னும் சிம்மக்கிணறு இங்குள்ளது. இதில் மாசிமகத்தில் நீராடுவது சிறப்பு.
கதம்ப மகரிஷி இப்பகுதியில் தவம் செய்தபோது தன்னுடைய தவத்திற்கு மனிதர்களாலும், மிருகங்களாலும், அரக்கர்களாலும் எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என இறைவனை வேண்டிக்கொண்டு தவமிருக்க ஆரம்பித்தார். இரணியாசுரன் என்ற அசுரன், முனிவர்கள் மற்றும் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனை வதம் செய்வது குறித்து, பிரம்மா, விஷ்ணு, சிவன், மற்றும் தேவர்கள் கூட்டமாய் இங்கு ஆலோசனை செய்ததாகவும் இதனாலேய இவ்வூருக்கு திருக்கோஷ்டியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மந்திர உபதேசம் வேண்டி ராமானுஜர், திருக்கோஷ்ட்டியூர் நம்பியை 18 முறை தேடி வந்தது இங்குதான். உலகமக்கள் அனைவருக்கும் ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை ராமானுஜர் உபதேசித்ததால் திருமந்திரம் விளைந்த திவ்யதேசம் என்ற பெருமை இதற்குண்டு.
மாசிமகம் (8/2/2020) தினத்தன்று இங்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. சவுமியநாராயணரிடம் வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும். அந்த விளக்கை புத்திர பாக்கியம், திருமணம் போன்ற கோரிக்கைகளை வைப்பவர்கள் வீட்டிற்கு எடுத்துச்சென்று பூஜையறையில் வைத்துக்கொள்ளலாம். வேண்டுதல் நிறைவேறியதும், அடுத்த மாசிமகத்தன்று மீண்டும் அந்த விளக்குடன் மேலும் 3 அல்லது 5 அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள். இங்குள்ள தாயாருக்கு திருமாமகள், நிலமாமகள், குலமாமகள் ஆகிய பெயர்களுண்டு.