தை அமாவாசை இன்று (21.01.2023) கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் விரதம் இருக்கும் முறைகள் பற்றி விரிவாக பார்க்கலாம்.
அமாவாசை என்பது இயல்பாகவே காலம் கடந்த முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் ஆகும். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவதை அமாவாசை திதி என்பர்.
ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அண்டு தை அமாவாசை சனிக்கிழமை வருகிறது. அதனால் இது மிகவும் பிரசித்தி பெற்றது. தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம்.
இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும் என நம்பப்படுகிறது.
விரதம் இருக்கும் முறை
அமாவாசையன்று தர்ப்பணம் கொடுப்பவர்கள் விரதம் இருக்கலாம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும்போது எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். தர்ப்பணம் கொடுத்தபின் வழ்க்கம்போல் வீட்டில் சமைத்த உணவை சாப்பிடலாம்.
அமாவாசை நாளில் அகத்திக்கீரை அல்லது முருங்கை கீரை சாப்பிடலாம், மற்ற கீரைகளை சேர்க்கக்கூடாது. கத்திரிக்காய், வெங்காயம், பூண்டு, முள்ளங்கியை அன்றைய சமையலில் தவிர்க்க வேண்டும். புடலங்காய், வெண்டைக்காய் சேர்த்துக்கொள்ளலாம். அசைவ சாப்பாட்டைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வீட்டில் உள்ளவர்களோ அல்லது நெருங்கிய உறவுகளிலோ இறப்பு ஏற்பட்டு 16 நாட்கள் கூட ஆகவில்லை என்றாலும் தை அமாவாசை விரதம் இருக்கலாம். அவர்களுக்கும் தர்ப்பணம் கொடுக்கலாம். யார் தர்ப்பணம் கொடுக்கிறாரோ அவர் மட்டும் விரதம் இருக்க வேண்டும். மற்றவர்கள் சாப்பிடலாம். கணவர் தர்ப்பணம் கொடுப்பதாக இருந்தால், மனைவி சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. சாப்பிட்ட பிறகே படையலுக்கான உணவைத் தயார் செய்யலாம்.
தர்ப்பணம் யார் கொடுக்கணும்?
திருமணமான பெண்ணுக்கு தாய் அல்லது தந்தை இல்லை என்றாலோ அல்லது இருவரும் இல்லை என்றாலும் அவர் விரதம் இருக்க கூடாது. குறிப்பாக அவர் கணவர் இருந்தால் கண்டிப்பாக விரதம் இருக்கக் கூடாது. அந்த பெண்ணுக்கு உடன் பிறந்த சகோதரர்கள் இருந்தால் அவர்கள் தான் அமாவாசை விரதம் இருந்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.
ஆண்கள் தாய் தந்தை இருக்கும் போது இந்த விரதத்தை கடைபிடிக்க வேண்டியதில்லை. ஆனால் தாய் அல்லது தந்தை ஒருவர் இல்லையென்றாலும்… இருவரும் இல்லையென்றாலும் இந்த அமாவாசை விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காகத்திற்கு உணவு
சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோக வாசலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால் தான் நாம் முதலில் காகத்திற்கு உணவு படைக்கிறோம். காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் இருக்கும் நம் முன்னோர்கள் சாந்தி அடைந்து நமக்கு ஆசி வழங்குவதாகவும் கூறப்படுகிறது. காகம் சாதம் எடுக்காவிட்டால் ஏதோ ஒரு மனக்குறை என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது.