தை அமாவாசை நாளை (21.01.2023) சனிக்கிழமை வருகிறது. 3 முக்கிய அமாவாசைகளில் இதுவும் ஒன்று. நம் முன்னோர்களுக்கு முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்.
வாழ்க்கையில் ஏற்றம், மகிழ்ச்சி, காரியத்தடை நீங்குதல் என உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் கிடைக்க தை அமாவாசையில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம்.
இதுவும் ஒருவகை கடன் தான். பழக்கம் இல்லாதவர்களும்கூட இந்த அமாவாசையில் வழிபடுவது அவசியம். அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடத் தேவையில்லை. பித்ரு கடன் தான் முதலில் முக்கியம். எள்ளும் தண்ணீரும் இறைப்பதே தர்ப்பணம் செய்வதின் முக்கிய அம்சம்.
சர்வ அமாவாசையாக இது உள்ளதால் காலையில் இருந்து இரவு வரை முழுநாள் வழிபாடாக இந்த தை அமாவாசை வந்துள்ளது. சூரிய உதயத்துக்குப் பிறகு தான் பித்ருகளுக்கான வழிபாட்டை செய்ய வேண்டும். காலை 6 மணிக்கு செய்வதே உத்தமம். எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்வதே முதல் விஷயம். முன்னோர்களின் பெயரை சொல்லிவிட்டு காசியை நினைத்து தர்ப்பணம் செய்யலாம்.
அந்தணர்களின் முன்னிலையிலும் இதை செய்யலாம். ஆண்களில் அப்பா, அம்மா இல்லாதவர்கள் செய்யலாம். யாராவது ஒருவர் இல்லை என்றாலும் கண்டிப்பாக செய்ய வேண்டும். மனைவி இல்லாதவர்கள், குழந்தையை இழந்தவர்களும் செய்யலாம். பெண்களுக்கு கணவர் இல்லை என்றால் யாருக்கு வேண்டுமானாலும் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யலாம். கணவர் இருந்தால் எள்ளும் தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யக்கூடாது.
காலையில் இந்த தர்ப்பணம் கொடுத்ததும் மதிய வேளையில் இலை போட்டு படையல் படைத்து வழிபட வேண்டும். மதியம் 12 மணி முதல் 1.30 மணிக்குள் இலை போட்டு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.
முன்னோர்களுக்குப் பிடித்த உணவாக படையல் போட வேண்டும். அன்று அன்னதானம் செய்து நமக்கான பலனைப் பெற முடியும். காகத்திற்கு உணவு வைத்து விட்டு தான் உபவாசம் உள்ளவர்கள் விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மாலை வேளையில் நம் முன்னோர்களை நினைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். மற்ற அமாவாசையைக் காட்டிலும் இந்த தை அமாவாசையில் நாலு பேருக்காவது சாப்பாடு வாங்கிக் கொடுத்து அவர்களது வயிற்றுப்பசியைத் தீர்த்து வைத்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். இந்த ஆண்டு சனிப்பெயர்ச்சி நடந்துள்ளது.
அதனால் சனீஸ்வர பகவானின் அனுக்கிரகம் நமக்கு வேண்டும். இந்த அமாவாசை நமக்கு சனிக்கிழமை வருவதால் சனீஸ்வர பகவானுக்கு இந்த வழிபாட்டையும் சேர்த்து பண்ண வேண்டும். அதாவது மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு கொடுப்பது, உடை கொடுப்பது அல்லது அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கித் தருவது ஆகிய தர்மங்களை செய்யலாம்.
இதன் காரணமாக அவர்களும் மனம் உவந்து நம் முன்னோர்களின் அருளாசி நமக்குக் கிடைக்கும். நம் பித்ருகளின் அருளாசியும் கிடைக்கும். கிரக தோஷங்களும் விலகி நம் வாழ்வில் வளம் உண்டாகும்.