திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுவது ராம அவதாரம் தான். தெய்வம், மனிதராக தோன்றி, ஒழுக்கம், வாழ்வியல் நெறிகளின் முறைகளை பின்பற்றி வாழ்ந்து காட்டிய அவதாரம்.
சிறந்த கணவர்
சிறந்த கணவர் எப்படி இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டி, அனைவருக்கும் உதாரணமாக விளங்கியதால் அவரை அவதார புருஷர் என போற்றுகின்றோம். பக்தி, பாசம், வீரம், அறநெறி, நட்பு, சகோதர பாசம், தாய் – தந்தை மரியாதை என அனைத்திற்கும் உதாரணமாக ராமரையும் நாம் குறிப்பிடுகிறோம்.
அப்படிப்பட்ட ராம பிரானாக மகாவிஷ்ணு அவதரித்த நாளே ராமநவமி. இன்று தான் அந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ராமரை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களையும் வாழ்க்கையில் பெற முடியும்.
மகாவிஷ்ணுவின் ஏழாவது அவதாரமாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரமாகவும் கருதப்படுவது ராம அவதாரம். அரசன், மகன், கணவன், தலைவன் என்பவன் எப்படி அறவழியில் வாழ வேண்டும் என்பதை உலகிற்கு எடுத்துக் காட்டிய அவதாரம்.
ராமர் அவதரித்த நாளை ராமநவமி திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் நவமி திதியில் ராம பிரான் அவதரித்தார்.
வட இந்தியாவின் சில பகுதிகளில் ராம நவமி, ஒன்பது நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இது ராம நவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
ராமநவமி விழா இன்று மார்ச் 30 ம் தேதி வியாழக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. நவமி திதியானது மார்ச் 29 ம் தேதி இரவு 11.49 மணிக்கு துவங்கி, மார்ச் 31ம் தேதி அதிகாலை 01.40 மணி வரை உள்ளது. அதற்கு பிறகே தசமி திதி வருகிறது. அதனால் மார்ச் 30ம் தேதி நாள் முழுவதும் நவமி திதி காணப்படுகிறது.
கொண்டாட்டம்
ராம நவமி விழா பத்து நாள் விழாவாக கொண்டாடப்படுதே வழக்கம். ராம நவமி விழாவின் நிறைவாக ராமர், சீதை திருக்கல்யாண வைபவமும், ராம பட்டாபிஷேகமும் நடத்தப்படும். இந்த சமயத்தில் ராமாயணம், சுந்தரகாண்டம் உள்ளிட்டவைகள் படித்து ராமரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து விதமான நலன்களையும் பெற முடியும்.
வழிபடும் முறை
ராம நவமி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டில் உள்ள ராமர் படத்திற்கு குங்குமம், சந்தனம் வைத்து துளசி மாலை அணிவிக்க வேண்டும். வெற்றிலை, பழம், பூ ஆகியன படைத்து வழிபட வேண்டும். பானகம், பாயசம், வடை ஆகியன நைவேத்தியமாக படைத்து, ராம நாமம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
ராம நவமி அன்று உபவாசம் இருந்து ராம நாமம் ஜபிப்பது புண்ணிய பலன்களை தரும்.
ராம நாமம்
ராமாயண கதை, ராமரின் புகழை போற்றும் கதைகளையும் படிப்பதும், கேட்டதும் நன்மை அளிக்கும். 108, 1008 என்ற கணக்கில் ராம ஜெயம் எழுத வேண்டும். ராம நாமத்தை இடை விடாது ஜபித்துக் கொண்டே இருந்தால் ராமரின் அருளுடன், ராம பக்தரான ஆஞ்சநேயரின் அருளையும் பெற முடியும்.
ராம நாமம் ஒலிக்கும் இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் வாசம் செய்வார் என்பதால் ராம நாம பாராயணம் செய்ய வேண்டும். இது அனைத்து விதமான பாவங்களையும் போக்கும் ஆற்றல் நிறைந்தது.
ராம நவமி அன்று தவறாமல் ராமருக்கு பானகமும், நீர்மோரும் வைத்து வழிபட வேண்டும். ராமர் காட்டில் இருந்த போது பானகம் மட்டுமே அருந்தியதால் அது அவருக்கு மிகவும் விருப்பமான பானமாக கருதப்படுகிறது.
பலன்கள்
ராம நாமம் ஜபிப்பதால் பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள், லட்சுமி கடாட்சம் நிறையும், பகைகள் அழியும், நோய்கள் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் செல்வ வளமும் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.