சூரியனின் சக்தியே உலகில் அற்புதமான சக்தி. உலக உயிர்களின் அடிப்படை அதுதான். மூலமும் அதுதான். உயிர்கள் வாழத் தேவையான சக்தியைத் தினமும் அளித்துக் கொண்டிருக்கும் சூரியபகவானை நாம் பல வழிகளில் வழிபடுகிறோம். குறிப்பாகப் பொங்கல் பண்டிகையைச் சொல்லலாம்.
அப்பேர்ப்பட்ட சூரியனுக்கே ஒரு முறை தன் சக்தியை இழந்து தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அது எப்படி என்றால் தட்சனின் தான் நடத்திய யாகத்திற்கு சிவபெருமானை தன் அகந்தையால் அழைக்காமல் விட்டு விட்டார்.
அப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் சந்திரனும், சூரியனும் முதல் ஆளாகப் போய் அந்த யாகத்திற்கு அமர்ந்து கொண்டனர். எப்படி இருக்கும்? இருவரும் தங்கள் ஒளியை இழந்து தவித்தனர். அதன்பிறகு நடந்தது என்ன என்று பார்ப்போம்.
சூரியனுக்கே மூலாதார சக்தியை கொடுத்ததால் இத்தலம் சூரிய மூலை என அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான்.
அனைத்து லோகங்களில் உள்ளவர்கள் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டு பயனடைவதைக் கண்ட சூரிய பகவானுக்கு, தன்னால் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது. அது சூரியன் மறையும் நேரம். அதல் சூரியனால் வழிபாட்டில் எப்படி கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் வேதனை அடைந்தார்.
யாக்ஞவல்கிய மாமுனியிடம் இதுபற்றி கூறினார் சூரிய பகவான். இந்த மாமுனி சூரியபகவானிடமிருந்து வேதங்களைக் கற்றவர். மாமுனி, அவருக்கு ஆறுதல் கூறினார். பின், தான் தினந்தோறும் வழிபடுகின்ற கீழச் சூரிய மூலையில் உள்ள சூரிய கோடிப் பிரகாசரிடம் தன் சூரியனின் கவலையை எடுத்துரைத்து, தினந்தோறும் அவரை வணங்கினார். தன் குருவின் வேதனையை தீர்த்து வைக்கும்படி வேண்டினார்.
பின், சூரிய பகவானிடமிருந்து தான் கற்றுக்கொண்ட வேதங்கள் அனைத்தையும் தட்சணையாக, வேதாக்கனி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களைப் பொறித்து சூரிய கோடீஸ்வரருடைய பாதங்களில் அர்ப் பணித்தார்.
மாமுனி சமர்ப்பித்த வேத மந்திர சக்திகளெல்லாம் சூரிய கோடீஸ்வரருடைய திருவடிகளில் ஓர் அற்புத விருட்சமாக வளர்ந்தது. அதுவே இலுப்பை மரம். இந்தக் கோவிலின் தல விருட்சமும் இதுதான்.
இலுப்பை மரத்தில் உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தீபம் ஏற்றத் தொடங்கினார் மாமுனி. அந்த பகுதி இலுப்ப மரக்காடாக மாறியது. தினமும் அந்த மரங்களிலிருந்து கிடைக்கும் இலுப்பை எண்ணெயால், கோடி அகல் தீபங்கள் ஏற்றி சூரிய கோடீஸ்வரரை வழிபடத் தொடங்கினார். தினமும் மாலையில் இந்த வழிபாடு நடந்தது. அந்த நேரம் பிரதோஷ வழிபாட்டு நேரம் அல்லவா?
மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது சூரிய பகவான், இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ வழிபாட்டின் பலன் அனைத்தையும் பெற்றார் என்பது புராண வரலாறு. அதுதான் கீழச் சூரிய மூலை தலம்.
இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சூரியகோடீஸ்வரர். இறைவியின் பெயர் பவளக்கொடி.
இந்த ஆலயம் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். சூரிய கோடீஸ்வரருக்கு பிரதோஷ நேரத்தில் அகல் விளக்கு ஏற்றி வணங்கினால், கண் சம்பந்தமான அனைத்து வியாதிகளும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சூரியனுக்கு மூலாதார சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. சூரியனார் கோவிலில் தன் குஷ்ட நோய் நீங்கப் பெற்ற சூரியன், இத்தலத்தில் தன் முழு சக்தியையும் பெற்றான். எனவே அதை வேறுபடுத்தி காட்டவே இத்தலம் கீழச் சூரிய மூலை என அழைக்கப்படுகிறது.
அமைவிடம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது இக்கோவில். கும்பகோணத்திலிருந்து கஞ்சனூர் வழியாக திருலோகி செல்லும் பேருந்தில் சென்றால் கோவிலருகே இறங்கிக் கொள்ளலாம்.