அறுபடை வீடுகளில் 2ம் படையான திருச்செந்தூரில் கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து இன்று 3வது நாள் நடக்கிறது. இந்தநாளில் வழக்கம்போல காலையும், மாலையும் சற்கோண தீபம் ஏற்ற வேண்டும். இன்று வ என்ற எழுத்தில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். விரதம் இருப்பவர்கள் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று வழிபடலாம். விரதம் இருக்கும் காலத்தில் முருகப்பெருமானின் நாமத்தைச் சொல்லச் சொல்ல நமக்கு உள் ஆற்றல் அதிகரிக்கும்.
இதனால் இந்த 3வது நாளில் நமக்கு ஆற்றல் அதிகரிக்கும். இன்று முறைப்படி வழிபட்டால் நினைத்தது நினைத்த மாதிரி நடக்கும். குறிப்பாக கல்யாணம், குழந்தை வரம், தொழில் சிறக்க என பல விஷயங்களை நாம் நினைத்து இருப்போம். நாம் இப்படி நல்லதை நினைத்தால் மட்டுமே இறைவனின் அருள் நமக்குத் துணை செய்யும்.
வள்ளுவர் எண்ணிய எண்ணத்தையே வலிமையாக எண்ணி எண்ணி அது நிறைவேற வேண்டும் என்ற குறிக்கோளோடு யார் ஒருவர் வாழ்கிறார்களோ அவர்களுக்கு அந்த எண்ணம் ஈடேறும் என்கிறார். பாரதியார் எண்ணிய முடிதல் வேண்டும்.
நல்லதே வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும் என்கிறார். நாம நினைத்தது நாம் நினைத்தது போலவே நடப்பதற்கு கடவுளிடம் செய்யக்கூடிய எளிமையான வழிபாடுதான் இந்த 3ம் நாள் வழிபாடு. முருகப்பெருமானைத் தாயாக, தந்தையாக நினைத்துக் கொண்டு நம் வேண்டுதலை உள்ளம் உருக பிரார்த்தனை செய்து வழிபடலாம்.
அருணகிரிநாதரின் திருப்புகழில் ‘நினைத்தது’ என்று தொடங்கும் பாடலையும், அனுபூதியில் ‘மெய்யே’ என தொடங்கும் பாடலையும் பாராயணம் செய்யலாம்.
கலியுகத்தின் கண்கண்ட கடவுளாம் நம் சொந்தக் கடவுள் முருகப்பெருமானை அடைவதற்கு நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து முருக பக்தியை நிலைநாட்ட அருணகிரிநாதசுவாமிகள் நமக்கு அனுபூதி அலங்காரத்தை அருளியிருக்கிறார்.
இவை எல்லாம் அற்புதமான படைப்புகள். இவற்றின் பொருள் உணர்ந்து அவற்றின் பலன் என்ன என்று நாம் தெரிந்து படித்தால் கண்டிப்பாக 100க்கு 100 சதவீதம் நமக்குப் பலன் தரக்கூடியதாகவே அமைந்திருக்கும். அந்த வகையில் அவருடைய ஒவ்வொரு பாடலும் பலன்தரக்கூடியதுதான். அவரது கந்தர் அலங்காரம், அனுபூதி, வேல்மாறல் போன்றவை அற்புதப் படைப்புகள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



