நவராத்திரியின் 9 ம் நாளான இன்று (23.10.2023) நிறைவுநாள். இன்று அம்பிகையை பரமேஸ்வரி என்ற பெயரில் அழைக்கிறோம். பரமனின் நாயகி. பரமனுக்கு ஈஸ்வரி என்பதால் பரமேஸ்வரி. இந்த அம்பிகை தைரியம், வீரம், ஆற்றல் என்று அத்தனையும் நமக்கு அருளக்கூடிய தேவியாக விளங்குகிறாள்.
அங்காள பரமேஸ்வரி என்ற திருக்கோலமும் உண்டு. பலருக்கும் இவள் குலதெய்வமாக விளங்குகிறாள். பரமேஸ்வரியை சுபத்ரா தேவி என்றும் சாமுண்டி என்றும் வழிபாடு செய்கிறோம்.
தாமரை, மரிக்கொழுந்து கொண்டு அர்ச்சிக்கலாம். சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் வைக்கலாம். பழங்களில் நாவல் பழம் உகந்தது. வசந்தா ராகத்தில் அமைந்த பாடல்களைப் பாடலாம்.
இந்த நாளில் நமக்கு நினைத்தது நடக்கும். அதை நடத்தித் தரும் நாள் தான் இந்த நாள். இன்று சரஸ்வதி பூஜை என்பதால் கொலு வைத்தவர்கள், கொலு வைக்காதவர்கள் என அனைவரும் வழிபடலாம்.
அதனால நம்ம வீட்டுல உள்ள எல்லா சாமி படங்களையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். நைவேத்தியத்துக்கு இனிப்பு ஏதாவது செய்யலாம். சுண்டல் செய்ய வேண்டும்.
பொரிகடலை, பழங்கள் எல்லாம் வாங்கிக் கொள்ள வேண்டும். புராண கால புத்தகங்கள், பள்ளிப்புத்தகங்களை வைத்து சந்தனம், குங்குமம் வைத்து தீப தூப ஆராதனைகள் எல்லாம் காட்டி வழிபட வேண்டும். சங்கீதம் கற்றுக் கொள்பவர்கள் இசைக்கருவிகளை வைத்து வழிபட வேண்டும்.
பூஜையில் வைத்த பொருள்களை எடுத்து நமது கலைகளை அதில் இன்று கண்டிப்பாக செய்ய வேண்டும். இன்று கண்டிப்பாக குழந்தைகள் பள்ளிப்புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும். அதனால் தான் வித்யாரம்பம் என்றார்கள். குருநாதரைப் பின்பற்றுபவர்களாக இருந்தால் கண்டிப்பாக இந்த நாளில் அவர்களிடம் வணக்கம் சொல்லி ஆசிர்வாதம் வாங்க வேண்டும்.
அதே போல ஆசிரியர்களும் தங்களது மாணவர்களை விருப்பு வெறுப்பு இல்லாமல் கத்துக்குற கலை அவருக்கு நிலைச்சி இருக்கணும்னு உள்ளன்போடு ஆசிர்வாதம் பண்ண வேண்டும்.
பெண்கள் வீட்டை சுத்தம் செய்யும்போது ஒரு பழக்கம் உள்ளது. ஒவ்வொரு ரூமிலும் குப்பையைக் கூட்டி கூட்டி குவித்து வைப்பார்கள். அப்படி செய்யக்கூடாது. உடனே அந்தக் குப்பைகளைக் கூட்டி அள்ளிக் குப்பைத்தொட்டியில் போட்டு விட வேண்டும்.
இரவு நேரங்களில் குப்பையை அள்ளக்கூடாது. அதனால் தான் அந்தக் காலத்தில் சாயங்காலம் நேரம் குப்பையைக் கூட்டி அள்ளி குப்பைத்தொட்டியில் போட்டு விடுவார்கள். அதன்பிறகு தான் விளக்கேற்றுவார்கள். அதையே நாமும் பின்பற்ற வேண்டும்.