பிரகலாதனின் பக்தி உலகம் அறிந்தது. அவனுடைய பிடிவாதத்திற்கு முன்பு இரண்யனின் கர்வம் நிலைக்கவில்லை.
தூணில் இருக்கிறாய் என்கிறாயே எங்கு இருக்கிறார் என கேட்கிறார். அப்போது தூணில் இருந்து இறைவன் நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டார். அப்படி வெளிப்பட்டு இரண்யனை வதம் செய்த பிறகும் நரசிம்ம மூர்த்தியின் கோபம் தணியவில்லை.
முப்பத்து முக்கோடி தேவர்கள் முயற்சி செய்தும் அவரது உக்கிரத்தைத் தணிய வைக்க முடியவில்லை. அவ்வளவு ஆவேசமாக இருக்கிறார் நரசிம்மர். அவரது கோபத்தைத் தணிய வைக்க வேண்டும் என தேவர்கள் எல்லோரும் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.
எப்படி அவர் மனிதனாகவும், தெய்வமாகவும், மிருகமாகவும் ஒரு கூட்டணி அமைத்து நரசிம்ம ரூபமாக வெளிப்பட்டாரா அதே போல பறவையாகவும், மனிதனாகவும், விலங்காகவும் என மூன்றையும் ஒன்றிணைத்து நரசிம்மம் என்கின்ற அவரது ரூபத்தைத் தணிக்க சரபம் என்ற ரூபத்தை சிவபெருமான் எடுக்கிறார்.
சரபம் என்ற பறவையின் இரண்டு இறக்கைகளையும் கொண்டு, யாழியின் உருவத்தைத் தனது உருவமாக்கி மனித உடலோடு கலந்த மூன்றின் கூட்டணியாக்கி சரபேஸ்வரர் என்ற ரூபம் தோன்றுகிறது. உக்கிரமாக அமர்ந்துள்ள நரசிம்மர் முன் தோன்றிய சரபேஸ்வரர் அவரது உக்கிரத்தை எப்படித் தணிப்பது என பார்த்துக் கொண்டே இருக்கிறார். தன்னோட இரண்டு இறக்கைகளாலும் அவரை ஆலிங்கனம் செய்கிறார்.
உடனே ஈஸ்வரமும், நரசிம்மராக இருக்கின்ற அவரது உக்கிரமும் ஒன்றாக சேர்ந்ததும் அவரது கோபம் தணிந்து விடுகிறது. கும்பகோணம் அருகில் உள்ள திருப்புவனத்தில் இந்த சரபேஸ்வரருக்கு என்று தனி சன்னதி அமைந்துள்ளது.
அங்கு மிகச்சிறப்பாக சரபேஸ்வரரின் வழிபாடு நடக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வழிபாடு நடைபெறுகிறது. அதே போல சென்னையில் குறுங்காலீஸ்வரர் கோயில் முன்பே உள்ள மண்டபத்தின் ஒரு தூணில் சரபேஸ்வரர் ஆலிங்கன சரபேஸ்வரராகக் காட்சித் தருகிறார்.
இவரை பிரதோஷ காலத்தில் வழிபடுவது சிறப்பானது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலமான நாலரை முதல் ஆறு மணிக்குள் சரபேஸ்வரர் வழிபாடு உகந்தது. இவரை வழிபடும்போது கூடவே அம்பிகையின் சொரூபமாக விளங்கும் சூலினி, பிரத்தியங்கரா தேவியையும் வழிபட வேண்டும்.
பொதுவாக இறைவன் கோபம் கொண்டு வரும்போது அம்பாளின் ரூபம் காளியாக இருக்கும். இங்கு இறைவன் சரபேஸ்வரராக வரும்போது அம்பாளின் ரூபம் சூலினி, பிரத்தியங்கரா தேவியாக இரண்டு சிறகுகளிலும் இருந்து அருள்புரியக்கூடிய தெய்வங்களாக விளங்குகிறார்கள்.
இந்த சரபேஸ்வரரை வழிபட்டால் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும். எல்லாவிதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும். பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை, கண்ணேறு (கண் திருஷ்டி)யால் பாதிக்கப்படுபவர்களும், நீண்ட நாள் நோயால் அவதிப்படுபவர்களும், திருமணத்தடை என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சரபேஸ்வரரை வழிபடுகிற போது அந்தப் பிரச்சனையில் இருந்து விமோச்சனம் கிடைக்கும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.