சனிப்பெயர்ச்சி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். நமக்கு இந்தத் தடவை நல்லது செய்வாரா? கெட்டது செய்வாரான்னு பார்ப்பாங்க.
சனிபகவானைப் பொருத்தவரை ஒரு ராசியில் நின்று ஜீவனத்தை நிர்ணயிப்பவர் அவர்தான். அதனால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். இன்று (29.3.2025) திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இரவு 9.44 மணிக்கு சனிப்பெயர்ச்சி தொடங்குகிறது. அதன்படி தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் இருந்து மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ம் பாதத்திற்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகிறார்.
அப்போது அவர் ரிஷபம், கன்னி, தனுசு ராசிகளைப் பார்க்கிறார். இந்தப் பலன்கள் ஒருவரது பூர்வ புண்ணியங்களுக்கு ஏற்ப மாறுகிறது. ஒருவர் ஜாதகத்தின்படி இந்த ஜென்மத்தில் என்னென்ன அனுபவிக்க வேண்டுமோ அதை எல்லாம் விதிப்படி நடத்துபவர்தான் சனிபகவான். அந்த வகையில் இன்றைய தினம் நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றிப் பார்ப்போமா…
அவரவர் குலதெய்வத்தை வணங்க வேண்டும். நம்மால் தீர்க்க முடியாத பிரச்சனை எதுவும் இருந்தால் அதை இந்தப் பிரபஞ்ச சக்தியிடமே ஒப்படைக்க வேண்டும். அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று வழிபட வேண்டும். குலதெய்வம், இஷ்ட தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம். விலங்குகள், பறவைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. இயன்றவரை அன்னதானம் செய்யலாம்.
இன்று அமாவாசையும் சனிப்பெயர்ச்சியும் சேர்ந்து வருவதால் கூடுதல் விசேஷம். வீட்டில் பெண்கள் சமைக்கும்போது நல்ல மனநிலையில் இருக்க வேண்டும். அவரவர் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தின் நாமத்தை உச்சரித்தபடி சமைக்கலாம். வீட்டில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் விடுவது அதிக நன்மையைத் தரும். இப்படி செய்து வந்தால் சனிப்பெயர்ச்சி காலத்தில் அடுத்த இரண்டரை வருடங்களுக்கு வீட்டில் எந்தவித சண்டை சச்சரவும் இன்றி மன அமைதியுடன் நிம்மதியாக இருக்கலாம். மகிழ்ச்சி நிலவும் என்பதும் ஐதீகம்.