திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் ரஷிய பக்தர்கள் தரிசனம் செய்தனர். அவர்கள் அப்போது ஆறு அடி உயர வேலை காணிக்கையாக செலுத்தினர்
இந்தியாவில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று என்பதுடன் முருகன் கடைசியாக இங்குதான் வந்தார் என்ற ஐதீகம் காரணமாக எப்போதுமே முருகனை காண இங்கு தான் பல பக்தர்கள் வருவார்கள். தைபூசம், கந்த சஷ்டி, கார்த்திகை, மார்கழி உள்பட பல்வேறு காலகட்டங்களில் பல லட்சம் பக்தர்கள் வருவார்கள். பொதுவாக இங்கு எல்லா நாளுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
இந்தநிலையில் ரஷியாவை சேர்ந்த பெண்கள் உள்பட 5 பக்தர்கள் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்தனர். அவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் மற்றும் நவக்கிரக கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷிய பக்தர்கள் நேற்று காலை பழனி முருகன் கோவிலுக்கு வந்தார்கள். அவர்கள் 6 அடி உயரம், 12 கிலோ எடை கொண்ட பித்தளை வேலை கொண்டு வந்திருந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் படிப்பாதை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று, அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். மேலும் மலைக்கோவிலில் உள்ள அலுவலகத்தில் தாங்கள் கொண்டு வந்த வேலை காணிக்கையாக செலுத்தினர். அதன்பிறகு மின் இழுவை ரயில் மூலமாக அடிவாரம் சென்று, அங்கிருந்து வேன் மூலம் கரூரில் உள்ள நவக்கிரக கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றார்கள்.