ராம நவமியின் வாழ்வியல் தத்துவமே இதுதான்….! கண்டிப்பா குழந்தைகளிடம் இப்போதே இதைச் சொல்லி வைங்க..!

By Sankar Velu

Published:

ராமநவமி என்றால் ராமபிரான் அவதரித்த நாள் என்று நமக்குத் தெரியும். அதையும் தாண்டி பல விஷயங்கள் இந்தத் தினத்தில் உள்ளன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கவிச்சக்கரவர்த்தி கம்பர் வியந்து நடையில் நின்றுயர் நாயகன் என ராமரை புகழ்ந்து பாடியுள்ளார்.

இன்று (30.03.2023) நவமியும், புனர்பூச நட்சத்திரமும் முழுமையாக அமைந்துள்ளது. இதுதான் எம்பெருமான் ராமனின் நட்சத்திரமும் கூட. குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு இது ஒரு அற்புதமான நாள்.

Ramar11
Ramar11

எம்பெருமான் ராமன் தசரத சக்கரவர்த்திக்கு பல ஆயிரம் ஆண்டுகள் தவம் பண்ணி கிடைத்த குழந்தை. 60 ஆயிரம் ஆண்டுகள் என வரலாற்றில் சொல்லப்பட்டுள்ளது. அதனால் இந்த குழந்தை வரம் வேண்டும் பிரார்த்தனைக்கு வலிமை சேர்க்கக்கூடிய அற்புதமான நாள் இது.

ராமர் மீது அதீதமான பிரியம் உள்ளவர்கள், எம்பெருமான் ராமனை நேசித்து வழிபடுபவர்கள் எல்லாரும் விரதம் இருந்து வழிபட ஒரு உன்னதமான நாள்.

குடும்ப ஒற்றுமை, கணவன், மனைவி ஒற்றுமை, சகோதர சகோதரிகளின் ஒற்றுமை, தொழில் மேன்மை, காரியங்கள் கைகூட இந்த ராமநவமியன்று எம்பெருமான் ராமனை நினைத்து வழிபடலாம்.

குழந்தை வரம் வேண்டுபவர்கள் காலை முதல் விரதம் இருக்க வேண்டும். காலை எழுந்ததும் ராமரின் திருவுருவப் படத்திற்கு நல்ல அழகான மலர்மாலைகள், துளசி இதழ்கள், துளசி மாலை, தீர்த்தம் ஆகியவற்றை வைங்க. நைவேத்தியமாக பால் பாயாசம் செய்யலாம். பால், நாட்டுச்சர்க்கரையுடன் கலந்து வைக்கலாம். மோர், பானகம், சுண்டல், சர்க்கரைப் பொங்கல் வைக்கலாம்.

ராமர் சீதா, ஆஞ்சநேயர் விக்கிரகம் இருந்தால் அபிஷேகம், ஆராதனைகள் செய்யலாம். ஆஞ்சநேயர் படத்திற்கும் பொட்டு, பூ வைத்து வழிபடலாம். சுந்தரகாண்டம் படிப்பது ராமநவமிக்கு விசேஷமானது. மனைபோட்டு ஆஞ்சநேயசுவாமிக்கு வச்சிட்டு தீப, தூபம் காட்டி ஆராதனை செய்ததும் சுந்தரகாண்டத்தைப் படிக்கலாம்.

விஷ்ணுசகஸ்ரநாமம் படிக்கலாம். ஸ்ரீராம ஜெயம் என 108 முறை ஜெபம் பண்ணிட்டு எளிமையான நைவேத்தியத்தை சுவாமிக்கு வைத்து வழிபடலாம். பக்கத்தில் உள்ள கோவில்களில் ராமர் சந்நிதி இருந்தால் அங்கு போய் வழிபடலாம்.

Ram Navami 3
Ram Navami 3

சிலர் குழந்தைக்கான தொட்டிலில் குழந்தை ராமரை வைத்து இதே போல எங்களுக்கும் ஒரு குழந்தையை அடுத்த ஆண்டு தா என வேண்டி வழிபடுவர். தாய் சொல்லைத் தட்டாதவர், தந்தை சொல்லை மதித்தவர் என ராமபிரான் வாழ்ந்து காட்டியுள்ளார்.

அதனால் நமது குழந்தைகளுக்கு இந்தக் கதையை சொல்லி அவர்களுக்கும் இந்தப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்கலாம். இன்றைய காலகட்டத்தில் திருமணம் முடிந்ததும் பிள்ளைகள் பெற்றோர் பேச்சைக் கேட்பதில்லை என்ற மனக்குறை பெரும்பாலானோருக்கு உண்டு. அவர்கள் பெற்றோர்களின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டுமானால் ராமகதையை அவர்களிடத்தில் விளக்கலாம்.

அதை இப்போது விளக்குவதை விட சிறுவயது முதலே குழந்தைகளிடம் ராமபிரானைப் பற்றியும் அவரது ராமகாவியத்தில் அவரது நன்னெறி வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அழகாக கதையின் சம்பவங்களுடன் திறம்பட எடுத்துக் கூறி வளர்க்க வேண்டும்.