எவ்வளவு பாடுபட்டும் ஒரு முன்னேற்றமும் இல்லையே… எல்லாம் கடனை அடைக்கவே சரியா இருக்கு… எங்க போயி நாம முன்னேற்றத்தைக் காண என அங்கலாய்ப்பவர்கள் நம்மில் பலர் உண்டு. அவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஒழுங்காகக் கடைபிடிக்காதவர்களாகவே இருப்பார்கள். இனி கவலை வேண்டாம். தினமும் இந்த 5 விஷயங்களைக் கட்டாயம் செய்து வாங்க. உங்களுக்கு வளர்ச்சி வந்து கொண்டே இருக்கும். பார்க்கலாமா…
காலை 4 மணிக்கு எழுந்துவிட்டால் பிரம்மமுகூர்த்தத்தில் விளக்கேற்றுங்கள். இது ரொம்ப கஷ்டம்னு சொன்னா 6 மணிக்குள்ளாவது விளக்கேற்றுங்கள். காலை 4.30 மணிக்கு விளக்கேற்றினால் அந்த வீட்டில் நாம் என்ன நினைக்கிறோமோ அத்தனையும் நடக்கும். முடிந்த அளவு சூரியன் உதயமாவதற்குள் விளக்கேற்றுங்கள்.
அப்படி விளக்கேற்றவில்லை என்றால் அந்த வீட்டில் என்ன செய்கிறோமோ அதை அப்படியே செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். வேறு எந்த வளர்ச்சியும் நாம் எதிர்பார்க்க முடியாது. அதே போல மாலை சூரியன் அஸ்தமனம் ஆன பின் விளக்கேற்ற வேண்டும். ஆதித்தனையும், சந்திரனையும் மையமாக வைத்துத் தான் நம் முன்னோர்கள் நம் வாழ்க்கை முறையை வகுத்துள்ளனர்.
காலை சூரியன் வருவதற்கு முன்பே நாம் தெய்வ வழிபாட்டை செய்துவிட வேண்டும். மாலையில் சூரியன் மறைந்த பிறகு, நிலவு எழுந்த பின் நாம் கடவுள் வழிபாட்டை செய்ய வேண்டும். தினமும் மாலை 6 மணிக்கு மேல் விளக்கேற்ற வேண்டும்.
வீட்டில் விளக்கேற்றும்போது தான் அந்த வீட்டில் நல்ல தெய்வீக சக்தி, ஆற்றல், அனுக்கிரகம் கிடைக்கும். அறியாமை ஒளி அகன்று அங்கு ஞான ஒளி பிரகாசிக்கும். தினமும் வாசலில் மஞ்சள் கலந்த நீரை தெளித்துக் கோலம் போட வேண்டும். முடியாதவர்கள் பூஜை அறையிலாவது சிறிய கோலம் போட வேண்டும்.
அந்தக்காலத்தில் மாலையிலும் வாசல் தெளித்துக் கோலம் போடுவர். பின்னர் வீட்டில் சாம்பிராணியைத் தினமும் போட வேண்டும். வீடு நிறைய கமகமன்னு வாசனை வர வேண்டும். அந்தப் புகை ஒத்துக்கொள்ளாதவர்கள் தசாங்கம் பயன்படுத்தலாம்.
அல்லது ஊதுபத்தியைப் பயன்படுத்தலாம். காலையில் தீப, தூப ஆராதனை செய்வது மிகவும் முக்கியம். காலையில் 5 மணிக்கு மேற்கண்ட எல்லாவற்றையும் செய்து முடித்ததும் கடவுள் முன் அமர்ந்து இறைவனை மனமுருக வழிபட வேண்டும்.
அப்போது நமக்குப் பிடித்த கடவுளின் பதிகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும். அபிராமி அந்தாதி, திருக்குறள், மாசில் வீணையும் பாடலைக் கூட தினமும் படிக்கலாம். நேரம் இருந்தால் பெரிய பதிகங்களைப் படிக்கலாம்.
வேலை இருந்தால் நாலே வரிகள் படியுங்கள். சுவாமிக்கு தினமும் நைவேத்தியம் வைக்க வேண்டும். எளிமையா நாலு கல்கண்டு, பேரீச்சம்பழம், பொட்டுக்கடலை, நாட்டுச்சர்க்கரை என இவற்றில் ஏதாவது ஒன்றையாவது வைத்து வழிபடலாம்.
இதை எல்லாம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் தொடரும். தொடர்ந்து நம் வேலைகளைப் பார்க்கும்போது எந்த விட தடையும் இன்றி நாம் நினைத்த செயல்களில் முன்னேற்றம் காணலாம். இந்த விஷயத்தைத் தொடர்ந்து 48 நாள்கள் செய்து பாருங்கள்.
உங்கள் வாழ்க்கையில் நிச்சயம் நல்ல மாற்றங்கள் மலரும். நீங்கள் அனுபவித்த அந்த நல்ல உணர்வை பிறருக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்களது வாழ்க்கையிலும் சந்தோஷமும், நிம்மதியும், முன்னேற்றமும் கிடைக்க நீங்கள் காரணமாக இருப்பீர்கள்.