இறைவன் தூணிலும் இருப்பான். துரும்பிலும் இருப்பான். இதில் பகுத்தறிவு வாதம் தேவையில்லை. மனமதைக் கோவிலாகக் கொண்டு வாழ்ந்து வரும்போது துன்பம் என்பதே இல்லை. இவற்றை நினைவுகூரும் வகையில் இன்றைய இனிய நாளில் திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.
மார்கழி 22 (6.1.2023) இன்று திருப்பள்ளியெழுச்சியின் 2வது பாடலைப் பார்ப்போம்.
அருணன் இந்திரன் திசை அணுகினன் என்று ஆரம்பிக்கிறார் மாணிக்கவாசகர். இந்தப்பாடலில் இருள்போய் மறைந்தது என்கிறார். கிழக்கே உதித்த ஆதித்தபகவானின் தேரோட்டியாக விளங்கியவர் அருணன். அவர் வந்து விட்டால் பின்னால் ஆதித்த பகவான் ஒளியுடன் வருவார். அவர் வந்தவுடன் இருள்போய் மறைந்தது. இருள் ஒளிவந்ததும் மறையும். அதே போல மனதில் இறைவன் வந்துவிட்டால் ஞானஒளி நமக்குள் வெளிப்படும்.
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பர். அப்படின்னா அகம் அழகாக இருந்தால் முகம் அழகாக இருக்கும். அழகுசாதனப்பொருள்களைக் கொண்டு நாம் நம்மை அழகாக்கினால் அதன் பெயர் அழகு.
தேஜஸ் என்றால் கடவுளைப் பார்த்த உடனே நமக்குக் கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். அதற்கு பெயர் தான் தேஜஸ். பேரொளியானது இறைவனின் திருவதனத்தில் இருக்கக் காரணம் அவரிடத்தில் பேரொளி பரவியிருக்கிறது. அந்தப் பேரோளியை நாம் இறைவனிடம் இருந்து பெறுவதால் நமக்கும் தேஜஸ் கிடைக்கிறது.
அந்த ஞானப்பிரகாசம் முகத்தில் வரணும்னா அகத்தில் ஒளி வரணும். அதற்கு ஒளிமயமான இறைவனைக் கொண்டு மனதிற்குள் வைக்க வேண்டும். இதற்கு அற்புதமான உதாரணம் பூசலார். மனதிற்குள் கோவில் கட்டியவர். திருநின்றவூரில் தான் இவர் அவதாரம் எடுத்தார்.
இறைவனின் மேல் பக்தி கொண்டவர். இவருக்கு சுவாமிக்குக் கோவில் கட்ட வேண்டும் என்று தீராத ஆசை. ஆனால் பரம ஏழை. நிறைய யோசித்துப் பார்த்தும் கட்ட முடியாமல் என்ன செய்வது என்று திகைத்தார். இதனால் மனம் உடைந்த அவர் வெளியில் தான் நம்மால் கோவில் கட்ட முடியவில்லை. மனதிற்குள்ளாவது கட்டி விடுவோமே என்று நினைக்கிறார்.
இதற்காக ஒவ்வொரு பொருளாகச் சேர்க்கிறார். கொஞ்சநாளில் எல்லாப் பொருள்களையும் சேர்த்ததும் நல்ல நாளாப் பார்த்து அடிக்கல் நாட்டுகிறார். கோவிலுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறார். அடுத்து எல்லா வேலையும் முடிகிறது. கும்பாபிஷேகத்திற்கும் நல்ல நாளாகப் பார்க்கிறார்.
கும்பாபிஷேகத்திற்கும் தயாராகிறது ஆலயம். இந்த வேளையில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் நிஜமாகவே கோவில் கட்டுகிறார். அவரும் அந்த கும்பாபிஷேக தேதியை பூசலார் வைச்ச அன்றே வைத்து விட்டார். அவரும் கும்பாபிஷேகத்திற்கு இறைவனை வேண்டி வரவேற்கிறார்.
இப்போது சுவாமி எங்கு செல்வார்? அவர் எங்கும் இருப்பார் அல்லவா? ஆனால் அவர் மன்னரின் கனவில் வந்து சொல்கிறார். நான் முதன் முதலில் பூசலார் கட்டிய கோவில் கும்பாபிஷேகத்திற்குத் தான் செல்கிறேன்.
ஏன் சுவாமி என மன்னர் கேட்கிறார். முதன்முதல்ல அவர் தான் என்னை கும்பாபிஷேகத்திற்கு அழைத்தார். அது எங்கே இருக்குது என கேட்க…திருநின்றவூரில் என்கிறார் சுவாமி. இது மன்னரின் தூக்கத்தைத் தொலைத்து விட்டது.
நம்மை விட பெரிய கோவிலாகக் கட்டியிருப்பாரோ அந்த அடியார். இறைவனே அவருடைய கோவிலுக்குத் தான் முதலில் செல்வேன் என்கிறாரே என்றும் அந்தக் கோவிலை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். அதன்படி கும்பாபிஷேகத்திற்குப் போகலாம்னு திருநின்றவூருக்கு வந்துவிட்டார்.
அங்கு கோலாகலம் இல்லை. மேளதாளம் இல்லை. மக்களிடம் ஆரவாரம் இல்லை. அப்போது பூசலாரை எங்கே என மக்களிடம் விசாரிக்கிறார். உடனே எதற்காகப் பார்க்க வேண்டும் என்கிறார். அவர் கட்டிய கோவிலைப் பார்க்க வேண்டும். அவராவது கோவிலாவது…ஒரு கருங்கல்லைக் கூட அவரால் வாங்க முடியாது என்கின்றனர் மக்கள்.
எங்காவது காடு மேடுன்னு உட்கார்ந்துருப்பான். சும்மா இருக்கமாட்டான். தூங்கிக் கொண்டே இருப்பான். அங்கு போய் பாருங்க என்கிறார்.
ஒருவழியாக மன்னர் அவரைத் தேடிப் போய்ப் பார்க்கிறார். மகாராஜா வாங்க என்றார். நீங்கள் கட்டிய கோவிலுக்கு என்னை அழைச்சிட்டுப் போங்க என்கிறார். அழைச்சிட்டுப் போறதா? அப்படி எல்லாம் எங்கேயும் நான் கோவில் கட்டலையே என்கிறார். இல்ல..இல்ல…நீங்க கட்டிய கோவிலுக்குத் தான் இறைவன் அதன் குடமுழுக்கிற்கு முதலில் வருவதாக சொன்னார் என்கிறார். அப்போது தான் பூசலார் உண்மையைச் சொல்கிறார்.
சுவாமி நான் உனக்கு என்ன கைமாறு செய்வேன்…நான் மனதிற்குள் கட்டிய கோவிலுக்கு இவ்வளவு பெரிசா நினைச்சியே…என நெகிழ்கிறார். ஊர் மக்களும் உண்மையை உணர்கின்றனர். ராஜா கட்டிய கோவிலை விட இதுதான் உயர்ந்தது என ஊர் மக்களும் பூசலாரைப் போற்றுகின்றனர்.
ஆண்டாள் இன்றைய பாடலில் அங்கன் மாஞாலத்து அரசர் அபிமான என்று ஆரம்பிக்கிறார்.
இந்தப்பாடலில் அரசர்களைப் பற்றி ஆரம்பிக்கிறார். ஒவ்வொரு இடத்திலும் அரசர்கள் இருப்பர். பெருமாள் பள்ளி கொண்டு இருக்கும் கட்டிலுக்குக் கீழ் வந்து இருந்து எங்களையும் கடைக்கண்ணால் பாரு கண்ணா என அந்த அரசர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
கிருஷ்ணபரமாத்மாவின் கண்கள் சிறப்பு. தாமரைப் பூ போன்றவன். அதனால் தான் கமலக்கண்ணன் ஆனார். ஒளி வீசும் கண்கள். சூரியன், சந்திரன் போல ஒளி வீசும் கண்கள் உனக்கு. சூரியன் தகிக்கக்கூடியவர். சந்திரன் குளுமையானவர். சுவாமி பக்தர்களைப் பார்க்கிற போது குளுமையான கண்களோடு பார்ப்பார். பகைவர்களைப் பார்க்கிற போது அக்னிபிழம்பாய் சூரிய கண்களால் பார்ப்பார். இவ்வாறு பக்தர்களுக்கு வரும் இடையூறுகளைக் களைகிறார்.
இதற்கு சிறந்த உதாரணம் பிரகலாதர் வரலாறு. அவர் இளவயதில் பாடசாலையில் ஓம் ஹிரண்யாய நம என்கிறார். அதற்கு அவர் ஓம் நமோ நாராயணநாய நம என்று தான் சொல்ல வேண்டும் என்கிறார். அவர் எவ்வளவு சொல்லியும் குழந்தை கேட்டபாடில்லை. அப்போது அவரது அப்பாவிடம் கொண்டு போய் விடுகிறார் வாத்தியார். அப்பா தான் ஹிரண்யன். அவர் கேட்கிறார். அப்பாக்கிட்ட சொல்லு…சுவாமி பேரை என்கிறார்.
ஓம் நமோ நாராயணாய நமக என்கிறார். அப்பாவுக்கு வந்ததே கோபம்…திரும்பவும் தன் பெயரையே சொல்லச் சொல்கிறார். அப்போதும் அவர் கேட்கவில்லை. அப்போது பிரகலாதனுக்கு 5 வயது தான்.உடனே பிள்ளை என்றும் பாராமல் தனக்குப் பிடிக்காதவரது பெயரை சொல்லிவிட்டானே என கொல்லத் துணிகிறார். மலையிலிருந்து உருட்டுகிறார். கடலில் கல்லுடன்; கட்டிப் போடுகிறார்.
கொடிய விஷம் கொடுத்தார். யானையை விட்டு மிதிக்கச் சொன்னார். ஆனால் எல்லா கொடுமைகளில் இருந்தும் அந்தப் பகவான் நாமம் இவரைக் காப்பாற்றியது. ஒரு கட்டத்தில் தாங்கிக்கவே முடியத ஹிரண்யன் கேட்டான். நான் பல கோடி வருஷங்களாக அவரைத் தான் தேடுகிறேன். ஆனால் பார்க்க முடியல. நீ மட்டும் எங்கிருந்துடா பார்க்குற என கேட்கிறார். எங்கும் இருப்பான் என்கிறார். இந்தத் தூணில் இருக்கிறாரா என கேட்கிறார்.
ஆம். இல்லாவிட்டால் நான் உயிரை விடுகிறேன் என்கிறார். அப்போது தூணை உடைக்கிறான் ஹிரண்யன். அப்போது தூணைப் பிளந்து கொண்டு நரசிம்ம அவதாரத்துடன் வந்து ஹிரண்யனை அழிக்கிறான். இப்போது மிரண்டு போய் இருந்த பிரகலாதனைக் கண்டு உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அவரிடமே சரணடைய வேண்டும் என்று சரணாகதி அடைகிறான் பிரகலாதன்.
இந்தப் பாடலிலும் கண்ணனின் அழகான கண்களைக் காண வேண்டும்…எங்கள் மீது நீ பார்த்து எங்களுக்கு குளிர்ந்த பார்வையைத் தந்து எங்களை அருள வேண்டும் என வேண்டுகிறார் நாச்சியார்.