உலகிலேயே கொண்டாடப்படும் மிகப்பழமையான பண்டிகை. நமக்கு உணவைத் தரும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், கால்நடை, உழவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் பண்டிகை இது. சாதி, மதம் பாராமல் ஒட்டுமொத்த தமிழகமே தமிழர் திருநாளாகக் கொண்டாடும் பண்டிகை. தமிழ் தேசிய திருநாளாகவும் கொண்டாடுகின்றனர்.
பொங்கல் பண்டிகையை உழவர் திருநாள், தமிழர் திருநாள், தைத்திருநாள் என்றும் அழைப்பர். தமிழகம் கடந்து ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், ரீயூனியன், தென்னாப்பிரிக்கா, வட அமெரிக்கா என பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடுவர்.
இந்தப் பொங்கல் ஆரியர்களுக்கு எதிரானது என்றும் சொல்லப்படுகிறது. ஏன்னா ஆரிய வேதங்களில் உழவர்களுக்கு எந்த விதமான சிறப்புகளும் கொடுக்கப்படவில்லையாம். பொங்கல் பண்டிகை முழுக்க முழுக்க உழவர்களைக் கொண்டாடும் பண்டிகை. விளக்கு முன்னால் காய்கறிகள், கிழங்கு வகைகள், பழங்களை படையலாக வைத்து சூரியபகவானை வேண்டிக் கொள்வர்.
பிறப்பு, இறப்பால் பாதிக்கப்படாத பண்டிகை பொங்கல் மட்டும் தான் என அறியப்படாத தமிழகம் என்று அறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.
சங்க இலக்கியங்களில் தைத்திருநாளைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்படுகிறது. நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, சீவகசிந்தாமணி ஆகிய நூல்களில் பொங்கல் பற்றிய குறிப்புகள் உள்ளன. தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள்.
அதற்கு முக்கிய காரணம் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்த நெற்கதிர்கள் எல்லாம் சரியாக 6 மாதத்தில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். இப்படி புதிதாக அறுடை செய்த நெல்லை இடித்து அரிசியாக்கி அதனுடன் நெய், சர்க்கரை, பருப்பு சேர்த்து பொங்கல் வைத்து பயிர் விளைய உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லும் பண்டிகை தான் இந்தப் பொங்கல்.
பொங்கல் பொங்குவதைப் போல தங்கள் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கணும்னு பொங்கல் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல்னு மகிழ்ச்சியோடு ஆரவாரம் செய்கிறோம்.
பொங்கல் என்ற சொல்லுக்கு கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல்னு பல அர்த்தங்கள் உண்டு. அதே போல தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டு என்றும் பல அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இத்தகைய சீரும் சிறப்பும் வாய்ந்த பொங்கல் பண்டிகை வரும் திங்கள்கிழமை அன்று ஜனவரி 15ம் நாள் கொண்டாடப்படுகிறது.