கோவில்களில் சங்கு ஊதுவது, நாதஸ்வரம் மற்றும் மத்தளம் என பல இசைக்கருவிகளை வாசிப்பார்கள். அந்தக் காலத்தில் பூஜையின் போது பூசாரி மணியை மட்டும் ஆட்டிக் கொண்டே பூஜை செய்வார். இப்போதெல்லாம் பூஜையின்போது மணி அடிக்கவும், டிரம்ஸ் வாசிப்பதற்கும் எலக்ட்ரானிக் கருவியே வந்துவிட்டது. இதற்கு எல்லாம் என்ன காரணம்?
கடவுளுக்கு அர்ப்பணம்
இசைக்கருவிகள் என்பது வெறும் சப்தம் மட்டும் எழுப்பக்கூடியவை அல்ல. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்து வழிபடுவது வழக்கம். அதில் சப்தம் என்பது ஆகாயத்தில் உள்ளடங்கும். பொதுவாக ஆலயங்களில் வழிபாட்டின் போதும், திருவிழாக் காலங்களிலும், குடமுழுக்கின்போதும் இசைக் கருவிகள் வாசிப்பது வழக்கம்.
எனவே, கோவில்களில் அன்றாட பூஜை வேளை, திருவிழாக் காலங்கள் மற்றும் குடமுழுக்கின்போதும் இசைப்பதற்கு என்று தனித்தனியான மரபுகள் உருவாக்கப்பட்டு அதற்கு ஏற்றவாறு இசைக்கருவிகளை வாசிக்கின்றனர்.
இசைக்கருவிகள்
நாதஸ்வரம், வெண்கல மணி, எக்காளம், புல்லாங்குழல், சங்கு, துத்தரி, மத்தளம், தவில், முரசு, தப்பு, திமிலை, தாளம், சேமக்கலம், வீணை, தபேலா, கடம் இவ்வாறு இறை வழிபாட்டில் இடம்பெறும் கருவிகள் பல உண்டு.
அன்றும், இன்றும் கோவில்களின் இசை வழிபாட்டில் முன்னிலையில் இருப்பது நாதஸ்வர இசை. கிராமங்களில் இருக்கும் கோவில்களில் வழிபாட்டின் போது உடுக்கை, பம்பை, புல்லாங்குழல், தப்பு போன்ற கருவிகள் இடம்பெறுகின்றன. பல இசைக்கருவிகள் வாசிக்கும்போது அதன் சப்தங்கள் மாறுபடாமல் வாசிப்பது அவசியம்.
மன அமைதி
காலப்போக்கில் பல கருவிகள் அருகிப்போக இன்று சில கருவிகள் மட்டும் இசைக்கப்படுகின்றன. நம் வாழ்வின் கடினமான நேரமானாலும், மகிழ்ச்சியான நேரமானாலும் மன அமைதியை தருவதில் இசைக்கு நிகர் வேறு எதுவுமில்லை.
இசையானது நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இசையை கேட்பதனால் நம் மனநலத்திலும், உடல்நலத்திலும் பல நேர்மறையான எண்ணங்கள் உருவாகுவதாகவும், மனஅழுத்தம் குறைவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நன்மைகள்
இசைக்கருவிகளை வாசிப்பதால் என்னென்ன நன்மைகள்னு பாருங்க. மத்தளம் சந்தோஷம் தரும். தவில் சோகங்களை போக்கும். கடம் மோட்சம் அளிக்கும். நாதஸ்வரம் மனோலயம் தரக்கூடியவை. பறை, தப்பட்டை வெற்றியைத் தரக்கூடியவை. தாளம் ஆரோக்கியம் மற்றும் சந்தோஷத்தை தரும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது கோவிலுக்கு அடிக்கடி போக வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா.