ஆண்டுக்கு ஒரு முறை வரும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். நாம் எந்த ஊரில் வேலை பார்த்தாலும் இந்த நாளில் வந்து நம் குலதெய்வத்தை வழிபட்டு விட வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதற்குமான பலன்களை நமக்குத் தரும். இந்த ஆண்டு பங்குனி உத்திரம் ஞாயிறா, திங்களா என்று பக்தர்களுக்குக் குழப்பம் வருகிறது. ஏன்னா 2 நாளிலும் பங்குனி உத்திரம் போடப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்தைத் தீர்க்கவும், வழிபாடு செய்வது குறித்தும் இப்போது பார்ப்போம்.
மாதங்களில் 12வது மாதமும், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமான உத்திரமும் வரும் அற்புதமான நாள். அன்று பௌர்ணமியும் சேர்ந்து வரும் போது முருகப்பெருமானின் அருள் கிடைக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி காலை 8.46 மணி முதல் மறுநாள் காலை 11.19 மணி வரை உத்திரம் நட்சத்திரம் வருகிறது. அதே போல் பௌர்ணமி மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணி முதல் மறுநாள் பிற்பகல் 1.16 மணி வரை வருகிறது.
எந்த ஒரு திதியும், நட்சத்திரமும் சூரிய உதயத்தைக் கடந்து வருகிறதோ அதைத் தான் நாம் பங்குனி உத்திரமாகக் கொண்டாட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை 24ம் தேதி சூரிய உதயத்திற்குப் பிறகு திதியும், நட்சத்திரமும் வருவதால் நாம் மறுநாளான திங்கள்கிழமை தான் பங்குனி உத்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அன்று தான் எல்லா கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாகக் கொண்டாடுவர். இந்தத் திருவிழாவன்று பல கோவில்களில் திருக்கல்யாணமும் நடக்கும். இன்னொன்று அன்று 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சந்திரகிரகணமும் வருகிறது.
அடுத்ததாக அன்றைய தினம் சோம வாரம். அன்று வீட்டின் பூஜை அறையில் வள்ளி, தெய்வானையுடன் முருகர் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்காரம் செய்யலாம். அல்லது முருகப்பெருமான் ராஜ அலங்காரத்துடன் இருந்தாலும் சரி. அந்தப்படத்தையும் வைத்து பூஜை செய்யலாம்.
பால் பாயாசம், பழம், கேசரி, கற்கண்டு, சர்க்கரைப் பொங்கல் என ஏதாவது ஒரு நைவேத்தியம் வைத்து வழிபடலாம். மார்ச் 25ம் தேதி காலை 11 மணி வரை தான் நட்சத்திரமும், திதியும் என்பதால் அதற்குள் வழிபட முடிந்தவர்கள் வழிபாடு செய்யலாம். அல்லது அன்று நாள் முழுவதும் முருகப்பெருமானை வழிபடலாம்.