தெற்கின் சஞ்சீவி மலை இதுதாங்க…கொங்கணச்சித்தர் தியானம் செய்த அற்புதமான தலம்…!

By Sankar Velu

Published:

பழம்பெருமை வாய்ந்தது நம் தாய்த்திருநாடு. ராமாயணம், மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்கள் தோன்றிய இடம். உலகநாடுகளில் பாரதத்தைத் தெய்வீக பூமி என்று சொன்னால் மிகையில்லை. ஒவ்வொரு இடங்களில் காணப்படும் திருக்கோவில்களுக்கும், திருத்தலங்களுக்கும் அற்புதங்கள் நிறைந்த வரலாறு உண்டு.

நமக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று அவற்றின் பழமைவாய்ந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும். இது நம் மனதுக்கும் உடலுக்கும் ஒரு வித புத்துணர்ச்சியைத் தரும்.

நம் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதே அறிவார்ந்த செயல். வெறும் கேளிக்கைகளுக்கும், பொழுது போக்குகளுக்கும் நேரத்தை அதிகளவில் செலவிடக்கூடாது. இதிகாசங்கள், புராண நிகழ்வுகள் நடந்த பல தலங்கள் தமிழகத்தில் உள்ளன. வெளிமாநிலங்களில் சென்று காண வாய்ப்பு கிடைக்காதவர்கள் தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களுக்காவது சென்று வாரம் ஒரு முறையேனும் அருகில் உள்ள கோவில்களுக்குச் சென்று வரலாம்.

வசதி வாய்ப்பு வருகையில் கொஞ்சம் தொலைவில் உள்ள கோவில்களுக்குக் குடும்பத்துடன் சென்று வழிபட்டு வரலாம். இதனால் வேண்டுகோள் நிறைவேறுவதோடு மட்டுமல்லாமல் நாம் பலவித விஷயங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இந்தப் புனிதப்பயணம் உதவுகிறது. அந்தவகையில் இன்று நாம் காண இருக்கும் தலமானது இதிகாசங்களில் ஒன்றான ராமாயண நிகழ்வு நடந்த ஒரு அற்புத தலம். இந்தத் தலத்தின் வரலாறு மற்றும் சிறப்பைப் பற்றிப் பார்ப்போம்.

தலவரலாறு

Velayuthanar temple 1
Velayuthanar temple

பெரும் காவியமான ராமாயணத்தில், இலங்கையில் ராமனுக்கும் ராவணனுக்கும் இடையே ராமாயணப் போர் நடந்தது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அதில் ​​ராமனின் சகோதரர் லட்சுமணன் ராவணனால் அனுப்பப்பட்ட இந்திரஜித்தின் அம்பால் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடினார்.

அதனால் அவரைக் குணப்படுத்த, ரிஷபம் மற்றும் கைலாச சிகரங்களுக்கிடையே இமயமலைத் தொடரிலிருந்து ஒரு சஞ்சீவனி மூலிகையைப் பெறும்படி ஜாம்பவான் அனுமனிடம் கேட்டார்.

அனுமன் அவரின் கருத்தினை ஏற்றுச் சஞ்சீவி மூலிகையைப் பெறப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் அந்த இரு சிகரங்களுக்கு இடையே உள்ள மலையில் குறிப்பிட்ட இடத்தில் அவரால் உயிர்காக்கும் மூலிகையைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

Oothiyoor 1
Oothiyoor

அதனால் விரக்தியடைந்த அவர் மலையைத் துண்டுகளாக உடைப்பது போல் உணர்ந்தார். ஆனால் அவருக்குத் திடீரென்று முழு மலைப்பகுதியையும் தூக்கி ஜாம்பவானிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் வரவே அதேபோல் செய்தார்.

அவர் இமயமலையிலிருந்து இலங்கை வரை இந்தியாவின் முழு நீளத்திலும் மலையைத் தூக்கிக்கொண்டு பறந்தார். அப்போது மலையின் ஒரு சில பகுதிகள் தரையில் பல இடங்களில் விழுந்தன. அதில் ஒன்று தான் 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணச் சித்தர் தியானம் செய்த ஊதியூர் மலை.

Kongana Siddhar
Kongana Siddhar

அனுமன் வந்து அடைந்தவுடன் ஜாம்பவான், மலையிலிருந்த சஞ்சீவனி மூலிகையை எடுத்து அதன் சாற்றை மயக்க நிலையில் இருக்கும் லட்சுமணன் மற்றும் அவரது வானர சேனையில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்து அனைவரின் உயிரையும் காப்பாற்றினார்.

இந்த மலை இன்றுவரை சஞ்சீவனி உட்பட அனைத்து மருத்துவ தாவரங்களையும் கொண்டுள்ளது. பல மருத்துவ தாவரங்கள் இருப்பதால் இது தெற்கின் சஞ்சீவி மலை என்று அழைக்கப்படுகிறது.

விழாக்கள்

தைப்பூசம், சித்ரா பௌர்ணமி, அமாவாசை, தலை ஆடி, வைகாசி விசாகம், தீபாவளி, நவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் ஆகியவை இங்கு நடைபெறும் முக்கிய விழாக்கள்.

அமைவிடம்

இத்தகைய சிறப்புவாய்ந்த கோவில் திருப்பூர் மாவட்டத்தில் ஊதியூர் என்ற இடத்தில் அருள்மிகு உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோவில் என்ற பெயரில் அமைந்துள்ளது.