நாயன்மார்கள் வரிசையில் சேர்ந்திருக்க வேண்டிய பெண்ணொருத்தி

By Staff

Published:

39da831ba91c6700b543770702e8bc86

சோழ நாட்டுப் பூம்புகார் நகரில் வணிகர் குடியில் தோன்றியவர் இயற்பகை நாயனார். வளமெல்லாம் நிறையப் பெற்ற இவர் சிவபெருமான்மீது மாளாத பற்று கொண்டவர். சிவனடியார்கள் வேண்டியதை மட்டுமன்றி மனதில் நினைத்ததையும் அவர்கள் மனம் மகிழும் வண்ணம் கொடுக்கக்கூடிய அளவில் அளவில்லாத பக்தி உடையவர்.        இப்படி இயற்பகையார் அடியார் பணி செய்துக்கொண்டிருக்கும் காலத்தில் தூய வெண்ணீறு அணிந்த மேனியுடன் புறத்தில் காவி அணிந்து அகத்தில் காமம் அணிந்தவராகத் தம் இல்லம் வந்த அடியாரை வரவேற்று வணங்கி ஆசி பெறுகிறார்.

b24ccd130685da440c1f3747105f17a4

     அப்போது வந்த அடியவர் இயற்பகையாரிடம் “அடியார் வேண்டுபவர் வேண்டுவதை நீ தருவாய் என்று கேள்விப்பட்டு இங்கு வந்துள்ளேன். நீ இசைவாயானால் எனக்கு வேண்டியதைக் கூறுவேன்” என்கிறார்.     இயற்பகையார் “தாங்கள் கேட்பது எதுவாயினும் என்னிடம் உளது எனின் அது எம்பெருமானின் உடைமையாகும். எனவே நீவிர் விரும்பிய பொருளைக் கேட்டு அருள்க” என்கிறார்.        “உன் மனைவியின் மீது பெருகிய காதலினால் அவளைக் கேட்டுப் பெற வந்துள்ளேன்” என்கிறார் அந்தக் காமத்துறவி. “காட்டுக்குப் போ” என்று கைகேயி கூறியவுடன் கம்ப நாடனின் காப்பியத் தலைவன் முகம் மலர்ந்ததைப் போல இயற்பகையார் முகம் மலர்ந்தது. “என்னிடம் உள்ளதொரு பொருளைக் கேட்டுள்ளீர்கள்” என்று உவகையுடன் கூறிக்கொண்டே வீட்டிற்குள் சென்றார். தம் மனையாளைக் கரம் பிடித்து அடியார் முன்பு அழைத்து வந்து “முறைப்படி மணம் செய்துக்கொண்ட என் மனையின் விளக்கே! இந்தத் துறவியாருக்கு உன்னை நான் கொடுத்து விட்டேன்” என்று கூறிவிடுகிறார். மனையாளும் ஒப்பி விடுகிறார்.

219efd61a80ecdc93c9f40878b642d58-1

        மனைவியைக் கொடுத்த மகிழ்வுடன் இயற்பகையார் அடியாரைப் பார்த்து “வேறு நான் செய்ய வேண்டுவது யாது?” என்று வினவுகிறார். “நான் உன் மனையாளுடன் இவ்வூரைக் கடந்து செல்லும்வரை நீ வழித்துணையாக உடன் வரவேண்டும்” என்கிறார் அடியார். இயற்பகையாரும் பொன்போல ஒளிரும் ஆடையையும் கச்சையையும் அணிந்து கையில் வாளையும் ஏந்திக் கொண்டு அம்மையாரையும் அடியவரையும் முன்னே போக விட்டு இவர் பின்னே காவலாகச் செல்கிறார்.

77fc12c570efd5effbe5eb6414facb6f

      உற்றார் உறவினர்கள் எல்லோரும் எதிர்வந்து தடுக்கின்றனர். தடுத்த அவர்களையெல்லாம் வெட்டி வீழ்த்துகிறார் இயற்பகையார். அடியவர் கூறிய இடம் வந்ததும் “சென்று வருகிறேன்” என்றுக்கூறித் திரும்பியும் பார்க்காமல் வந்து விடுகிறார். அடியாராய் வந்த ஈசன் மனம் மகிழ்ந்து “இயற்பகையானே ஓலம்” என்று ஓலமிட்டு அழைக்கிறார். அப்போதும் இயற்பகையார் “இன்னும் உம்மைத் தடுப்பவர் உளர் எனின் அவரையும் என் வாளால் வெட்டுவேன்” என்று கூறிக்கொண்டே வருகிறார். அங்கு அடியவரைக் காணவில்லை. மறைந்துவிடுகிறார். வானத்தில் இறைவன் உமையாளுடன் காட்சி அளிக்கிறார்.

       இப்படித் தம் உரிமை மனையாளையும் சிறிதும் வருத்தமின்றி ஆண்டவனின் அடியாருக்குக் கொடுத்த இயற்பகை நாயனாரை,

இன்புறுதாரந்தன்னைஈசனுக்கன்பர்என்றே

துன்புறாதுதவும்தொண்டர்பெருமையைத்தொழுதுவாழ்த்தி

(பெரியபுராணம்: 439)

என்று போற்றுகிறார் சேக்கிழார். சேக்கிழாருக்குத் தொண்டர்தம் பெருமையை எழுத துணையாய் நின்ற திருத்தொண்டத் தொகையை இயற்றிய சுந்தரமூர்த்தி நயனார்

இல்லையேஎன்னாதஇயற்பகைக்கும்அடியேன்(திருத்தொண்டத்தொகை)

என்று போற்றுகிறார்.

கைதவம்பேசிநின்காதலியைத்தருகென்றலுமே

மைதிகழ்கண்ணியைஈந்தவன்வாய்ந்தபெரும்புகழ்வந்(து)

எய்தியகாவிரிப்பூம்பட்டினத்துள்இயற்பகையே. (திருத்தொண்டர்திருவந்தாதி: 4)

என்று நம்பியாண்டார் நம்பி போற்றுகிறார். ஆனால் இந்த மூவரின் நூல்களில் எங்கும் இயற்பகையாரின் துணைவியார் எள் நுணியளவேனும் போற்றப் படவில்லை

கணவனின் சொல்லைத் தட்ட முடியாத்தால அல்லது உண்மையிலேயே இறைவனுக்குத் தொண்டாற்றும் நோக்கிலோ அம்மையார் மறுப்பேதும் சொல்லாமல் அடியாருக்குத் தம்மை ஈய நினைத்தமை கற்புடைய பெண்களால் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாதது. கற்புக் கொள்கை மேலோங்கி இருந்த அக்காலத்தில் தம்மைப் பற்றியோ, தம்மை உலகம் போற்றுமா தூற்றுமா என்பதைப் பற்றியெல்லாம் சற்றும் சிந்திக்கவில்லை. அப்படிப்பட்ட அம்மையாரைத் தம்பிரான் தோழரும் நம்பியாண்டார் நம்பியும், தெய்வச் சேக்கிழார் பெருமானும் ஏன் போற்றவில்லைன்னு தெரியவில்லை. அவரது பெயரைக்கூட நம்மால் அறிந்துக்கொள்ள இயலாமல் போயிற்று. நின்ற சீர் நெடுமாறனின் துணைவியாக வாழ்ந்த மங்கையர்க்கரசியாருக்குப் பாடியருளியதைப் போலவோ சுந்தரரைப் பெற்ற இசைஞானியாரைப் பாடியதைப் போலவோ ஓரிரு பாடல்களையாவது பாடி அடியார்களுள் ஒருவராக இந்த அம்மையாரையும் சேர்த்திருக்கலாம். இறைவனின் மனதை யாரறிவார்?!

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

Leave a Comment